Monday 13 June 2016

ட்ரூ காலர் செயல்பாடு' நம் எண்கள் எப்படி கிடைக்கின்றன?

மொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் பயனுள்ள செயலி “ட்ரூ காலர்”. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் இதனைப் பயன்படுத்துபவர் எண்ணிக்கை மிக அதிகம் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன் பயன்படுத்தும் 20 கோடி பேரில், 13 கோடி பேர் இதனைப் பயன்படுத்துகின்றனர். இந்தி மொழி, ஒலிபெயர்ப்பு மற்றும் பிற மாநில மொழிகள் பயன்பாடுகள் இந்த செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதால், இதன் பயன்பாடு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த செயலி அனைத்து வகை மொபைல் போன் இயக்க கட்டமைப்புகளில் செயல்படுகிறது. Android, iOS, BlackBerry, Symbian, Windows Mobile, Windows Phone 7, மற்றும் Windows Phone 8 ஆகிய அனைத்திற்குமென இதன் பதிப்புகள் கிடைக்கின்றன. இந்திய மொழிகள் உட்பட பன்னாட்டு மொழிகளில் இது செயல்படுகிறது. 2014 ஆம் ஆண்டில், 35 மொழிகளுக்கு மேல் இதில் பயன்படுத்தப்பட்டன. 

இந்தியாவில் ஒருவர் சராசரியாக, தன் மொபைல் போனில் 12 அழைப்புகளை மேற்கொள்கிறார். 10 அழைப்புகளைப் பெறுகிறார் என்று தனக்குக் கிடைக்கும் தகவல்களின் அழைப்புகளின் அடிப்படையில் ட்ரூ காலர் அறிவித்துள்ளது. இந்த வகையில், ஒருவர் தன் மொபைல் போனில் 20 முறை இயக்கத்தினை மேற்கொள்கிறார். அனைத்து செயல்பாடுகளிலும், ட்ரூ காலர் அவருக்கு உதவுகிறது. இதனோடு இணைந்த ட்ரூ டயலர் செயலி, வெளி அழைப்பு ஒன்று செல்லும் முன்பே, எந்த நபருக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது என்று காட்டுகிறது. தகவல் தொலை தொடர்பில், இணையத்தின் வழியான தொடர்பில், ஒருவருடைய மின் அஞ்சல் முகவரியே அவரை அடையாளம் காட்டும் தகவலாகப் பயன்பட்டு வருகிறது. ட்ரூ காலர் மூலம், ஒருவர் அவருடைய மொபைல் எண் மூலம் அடையாளம் காட்டப்படுவது தற்போது பழக்கமாகி வருகிறது. இதனாலேயே, பல இணைய வர்த்தக நிறுவனங்கள் (எ.கா. Quikr, redBus, Goibibo, ShopClues, Naukri.com மற்றும் OYO Rooms) தங்கள் வாடிக்கையாளர்களை அடையாளம் காண, ட்ரூ காலர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.


சென்ற ஆண்டு ஜூலையில், 'ட்ரூ காலர்' தன்னுடைய எஸ்.எம்.எஸ். செயலியை 'ட்ரூ மெசஞ்சர்' என்ற பெயரில் வெளியிட்டது. இது இந்தியாவிற்கு மட்டுமானதாகும். இந்த செயலி, எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகையில், அனுப்பப்படும் மொபைல் போன் எண்ணுக்கு உரியவரை அடையாளம் காட்டும். ஏறத்தாழ 15 கோடி பேர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் மட்டுமிருந்து இதன் சர்வரில், 170 கோடிக்கு மேற்பட்ட எண்கள் உள்ளன. தினந்தோறும் 12 கோடி ஸ்பேம் அழைப்புகள் தடுக்கப்படுகின்றன. தினந்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள், இதனைப் புதியதாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 

மொபைல் போன்களில், நம்மை அழைக்கும் நபர், நம் தொடர்புடையவர்களின் எண்கள் பட்டியலில் பதிந்து வைக்கப்படாவிட்டால், அழைக்கும் நபரின் பெயர் நமக்குத் தெரியாது. ஆனால், நமக்கு அன்றாடம் பல அழைப்புகள், வர்த்தக ரீதியாகவும், மோசமான அழைப்பாகவும் கிடைக்கின்றன. இவற்றை நாம் தேடி, அழைப்பவர் யாரென அறிய முடியாது. இந்த இடத்தில் தான், 'ட்ரூ காலர்' செயலி நமக்கு உதவுகிறது. 

'ட்ரூ காலர்' செயலியினை ஸ்கேண்டிநேவியா நாட்டின் True Software Scandinavia AB என்னும் நிறுவனம் வழங்குகிறது. ”தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்” என அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கூறுவார்கள். அதே போல தேவை ஒன்றை உணர்ந்த இருவர் முனைந்து உருவாக்கி, இன்று பன்னாடுகளிலும், பல மொழிகளில் பயன்படுத்தப்படுகிறது, 'ட்ரூ காலர்' செயலி.


ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த, 31 வயதே நிரம்பிய மாமெடி மற்றும் நாமி (Alan Mamedi and Nami Zarringhalam) ஆகிய இருவருக்கும், தங்களின் வேலை வாங்கும் நிறுவன உரிமையாளர்களின் மொபைல் எண்களை அறிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அது மட்டுமின்றி, மாமெடிக்கு பன்னாட்டளவில் அழைப்பு வந்த போது, அவற்றை வடிகட்டி, முக்கிய தொலைபேசி அழைப்புகளை மட்டும் ஏற்றுக் கொள்ளும் வழியைக் காண திட்டமிட்டார். முதலில் சிறிய அளவில், 'ட்ரூ காலர்' செயலியை உருவாக்கி, இணைய தளம் ஒன்றில் அனைவருக்கும் வழங்கிய போது, முதல் வாரத்திலேயே, 10 ஆயிரம் பேருக்கு மேலாக, இதனைத் தரவிறக்கம் செய்தது தெரிய வந்தது. இதுவே அவர்களுக்கு ஊக்கத்தைத் தந்து, அதனை மேம்படுத்தும் பணியில் இறங்கச் செய்தது. தாங்கள் பார்த்து வந்த பணியிலிருந்து விலகி, 'ட்ரூ காலர்' வடிவமைக்கும் பணியில் இறங்கினர். இன்று அவர்கள் வடிவமைத்து இலவசமாகத் தரும் செயலி, உலகின் மிகப் பெரிய தொலைபேசி பேரேட்டினைக் கொண்டுள்ளது. உலகின் அனைத்து தொலைபேசிகளின் எண்கள் மற்றும் அவற்றைக் கொண்டுள்ளவர்களின் விபரங்கள், ஒரே ஏட்டில் கிடைத்தால் எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்து பாருங்கள். அதுதான் ட்ரூ காலர் செயலி. அது மட்டுமின்றி, நமக்கு வரும் அநாமதேய அழைப்புகள் தரும் எண்களை மிக எளிதாக இதன் மூலம் தடுக்கலாம்.


”தொலை தொடர்பு என்று வருகையில், மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு மன வருத்தம் அளிக்கும் தீங்கு ஒன்றுக்குத் தீர்வாக, 'ட்ரூ காலர்' செயல்படுகிறது” என்று இதனை வழங்கும் நிறுவனத்தைத் தொடங்கிய இருவரில் ஒருவரான மாமெடி கூறியுள்ளார். ட்ரூ காலர் செயலிக்கு நம் எண்கள் எப்படி கிடைக்கின்றன? இந்தக் கேள்வி, இந்த செயலியைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் தெரிந்து கொண்டவர்கள் மனதில் முதலில் எழுகிறது. இந்த செயலியைப் பயன்படுத்த ஒருவர் அதனைத் தரவிறக்கம் செய்து, பதிந்து கொள்கையில், ட்ரூ காலர் செயலி அவரின் மொபைல் போனில் உள்ள, தொலைபேசி எண்கள் அடங்கிய தொகுப்பினைப் பெற்றுக் கொள்ள சம்மதம் கேட்டுப் பெறுகிறது. “ஒருவரின் சம்மதம் இன்றி அவர் மொபைல் போன்களில் முகவரிப் பிரிவுகளில் உள்ள எண்களை எடுப்பதில்லை” என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

இப்படியே, உலகெங்கும் உள்ள பல கோடிப் பேர்களின் மொபைல் போன்களின் தொடர்பு நபர்களின் எண்கள், அவர்கள் பெயர்களுடன், ட்ரூ காலர் செயலியின் சர்வரில் பதியப்படுகின்றன. இந்த வகையில் ஒருவர் ட்ரூ காலர் செயலியைப் பயன்படுத்தினாலும், அவரின் போனில் உள்ள அனைத்து தொடர்புகளும், ட்ரூ காலரின் சர்வரில் பதியப்படுகின்றன. பின்னர், இவை சலித்தெடுக்கப்பட்டு, சரியான பெயர் மற்றும் அவரின் எண்கள் கொண்ட பட்டியல் உருவாக்கப்படுகிறது. அதன் பின்னர், உங்களுக்கு அழைப்பு வருகையில், ட்ரூ காலர் செயலி செயல்பாட்டில் இருந்தால், உடனே எண்ணுக்குரியவரின் பெயர் காட்டப்படுகிறது. 

அல்லது, நீங்களாக, ட்ரூ காலர் செயலியில், ஓர் எண்ணுக்குரியவரைத் தேடி தகவல் பெறலாம். அப்படிப் பெறும்போது, அந்த எண்ணுக்குரியவருக்கு, இது போல, இந்த எண்ணிலிருந்து ஒருவர் உங்கள் எண் குறித்து தேடினார் என்ற செய்தி அனுப்பப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட ஓர் எண்ணை, ”ஸ்பேம்” என அறிவிக்கலாம். ட்ரூ காலர், அந்த எண்ணிடமிருந்து அழைப்பு வருகையில், எத்தனை நபர்கள் அந்த எண்ணை ஸ்பேம் எனக் குறிப்பிட்டுள்ளனர் என்று காட்டுகிறது. 

நமக்கு தேவையற்ற வகையில் அழைப்பு கொடுத்து, நம் நேரத்தை வீணாக்கும் நபரின் எண்ணைக் கொடுத்து, அந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தால், தடுக்கும்படி ட்ரூ காலரைப் பயன்படுத்தலாம். இந்த ஒரு பயன்பாட்டிற்காகவே, அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில், மூன்றாவது இடத்தை ட்ரூ காலர் பெற்றுள்ளது. முதல் இரண்டு இடத்தினைப் பெற்றவை, பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் செயலிகள். 


பெர்சனல் கம்ப்யூட்டர் மூலமும் ஓர் எண்ணுக்குரியவரைக் கண்டறிய ட்ரூ காலர் உதவுகிறது. இதற்கு https://www.truecaller.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். ”200 கோடி போன் எண்களுக்கு மேல் இங்கு தேடிப் பெறுக” என்ற தலைப்புடன் போன் எண் குறித்துத் தேடி அறிய வழி தரப்படுகிறது. இங்கு தரப்பட்டுள்ள நீளத் தேடல் கட்டத்தில், முதலில் தேடப்படும் தொலைபேசி எண் உள்ள நாட்டைத் தேர்ந்தெடுக்கவும். அனைத்து நாடுகளின் பெயர்களும், அவற்றிற்கான தொலைபேசி குறியீட்டு எண்ணும் பட்டியலிடப்பட்டு கிடைக்கும். நாட்டைத் தேர்ந்தெடுத்த பின், தொலைபேசி எண்ணை (மொபைல் அல்லது லேண்ட் லைன்) உள்ளீடு செய்து எண்டர் தட்டவும். உடன், அந்த தொலைபேசி எண்ணுக்குரியவர் பெயர், முகவரி, அது மொபைல் அல்லது வயர் வழி இணைப்பு மற்றும் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனத்தின் பெயர் ஆகியவை காட்டப்படும்.

'ட்ரூ காலர்' செயலி, நம்மை அடையாளம் காட்டுவது, தனி மனித உரிமையைப் பறிக்கும் செயல் ஆகாதா? எனப் பலர் கேட்டுள்ளனர். செயலியைத் தரவிறக்கம் செய்திடும் நபரின் எண்ணை, இந்த செயலி அடையாளம் காட்டலாம். ஆனால், அவர் அழைக்கும் மற்றும் அவரை அழைக்கும் மற்றவர்களின் எண்களை எப்படி அடையாளம் காட்டலாம்? என்று பலர் கோபப்படுகின்றனர். இது நியாயமான கேள்வியே. இதற்கான தீர்வையும் 'ட்ரூ காலர்' வழங்குகிறது. அதன் இணைய தளம் சென்று (https://www.truecaller.com/unlist) உங்கள் எண்ணை பட்டியலிலிருந்து நீக்குமாறு கேட்டுக் கொள்ளலாம். தரப்பட்டுள்ள கட்டத்தில், நாட்டிற்கான குறியீட்டு எண்ணுடன் (+91), உங்கள் மொபைல் எண்ணைத் தர வேண்டும். 24 மணி நேரத்திற்குள்ளாக, உங்கள் எண் அதன் சர்வரின் டேட்டா பேஸிலிருந்து நீக்கப்படும். நீங்கள் உங்கள் எண்ணை, அதன் தளத்தில் பதிவு செய்திருந்தால், முதலில் உங்கள் எண்ணை செயல் இழக்கச் செய்திட வேண்டும். இதற்கும் இந்த தளத்தில் இடம் தரப்பட்டுள்ளது. இதன் செயலியில், Settings menu சென்று, About tab தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து Deactivate என்பதில் கிளிக் செய்திட வேண்டும். நீங்கள் இதுவரை 'ட்ரூ காலர்' பயன்படுத்தாமல் இருந்தால், செயலியைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள். தேவையற்ற அழைப்புகளைத் தவிர்க்கலாம்.


No comments:

Post a Comment