விண்டோஸ் 8 இயக்க முறைமை நமக்கு அளிக்கப்பட்ட போது, அதில் பல செயல்பாடுகள் முற்றிலும் புதியனவாக இருந்தன. தொடு உணர் செயல் திரை, டைல்ஸ்களில் புரோகிராம்கள் மட்டுமின்றி, இன்னும் பல புதிய வசதிகளும் அளிக்கப்பட்டன. இந்த புதிய வசதிகளில் ஒன்று Power User Menu. இதனைப் பயனாளர்கள் அனைவரும் மிகவும் விரும்பி ஏற்றுக் கொண்டு பயன்படுத்தினார்கள்.
அதனாலேயே, விண்டோஸ் 8க்கு மாற்றாக, விண்டோஸ் 10 அறிமுகமானபோது, பல அம்சங்களில் மாற்றம் ஏற்பட்டாலும், பவர் யூசர் மெனு அப்படியே தரப்பட்டுள்ளது. இதில் தரப்பட்டுள்ள பயன்பாடுகள் குறித்தும், விண்டோஸ் 10ல் அவற்றை எப்படி, எதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் இங்கு காணலாம். விண்டோஸ் 8ல் ஸ்டார்ட் மெனு முழுமையாக நீக்கப்பட்டதால், மைக்ரோசாப்ட் பவர் யூசர் மெனுவினைச் சற்று மறைவாகவே தந்தது. ஸ்டார்ட் மெனுவிற்குப் பதிலாக இது இல்லை என்றாலும், விண்டோஸ் இயக்கத்தின் சில முக்கிய, புதிய செயல்பாடுகளுக்கு பவர் யூசர் மெனு வழி தருகின்றது.
விண்டோஸ் 10ல் ஸ்டார்ட் மெனு மீண்டும் அறிமுகமானது. அத்துடன் பவர் யூசர் மெனுவும் தரப்பட்டது. நாம் விண்டோஸ் இயக்கத்தில் பயன்படுத்தும் பல டூல்களையும், செயல்பாடுகளையும், சில நொடிகளில் அணுகிப் பெற பவர் யூசர் மெனு உதவிடுகிறது. ஒரு சில கீ அழுத்தத்தில், கீ போர்ட் ஷார்ட் கட் அமைப்பில், இந்த செயல்பாடுகளை நாம் இந்த பவர் யூசர் மெனு மூலம் பெற முடிகிறது.
பவர் யூசர் மெனுவினை, விண்டோஸ் 10 இயக்கத்தில் பெற, ஸ்டார்ட் பட்டனில் ரைட் கிளிக் செய்து, விண்டோஸ் கீயுடன் X யை (Windows Key + X) அழுத்தவும். திரையின் இடது புறத்தில் நெட்டு வாக்கில் செயலிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்று காட்டப்படும். இதில் நமக்குத் தேவையான செயலியில் கிளிக் செய்தால், அதனை இயக்கும் வகையில் உடனடியாகப் பெறலாம். இந்தப் பட்டியலில் உள்ளவற்றையும், அவற்றின் பயன்களையும் இங்கு பார்க்கலாம்.
Programs and Features:
முதலாவதாக நாம் பெறுவது “செயலிகளும் அவற்றின் செயல்பாடுகளும்” என்ற பிரிவு. இதன் மூலம் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள சாப்வேர் செயலிகளை நீக்கலாம். விண்டோஸ் அப்டேட் பைல்கள் எவை பதியப்பட்டுள்ளன என்று பார்க்கலாம். தேவையற்ற அப்டேட் பைல்களை நீக்கலாம். சில விண்டோஸ் சிஸ்டம் செயல்பாடுகளை இயக்கலாம்; அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்.
Power Options:
இதனைப் பயன்படுத்தி, நாம் மின்சக்தியைப் பயன்படுத்துவதனை நிர்வகிக்கலாம். லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒரு செயலி. உங்கள் கம்ப்யூட்டர் அல்லது மானிட்டரை குறிப்பிட்ட நேரம் பயன்படுத்தாமல் இருந்தால், அது செயல்படுவதனை நிறுத்த இதனை அமைக்கலாம்.
Event Viewer:
இது ஒரு புதிய செயல்வழி முறை. உங்கள் கம்ப்யூட்டரில் என்ன என்ன நிகழ்வுகள் ஏற்பட்டன என்று வரிசையாக, இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். இதனைப் பயன்படுத்தி, ஒரு செயலி ஏன் தன் இயக்கத்தினை திடீரென (Crash) முடங்கிப் போயிற்று என்பதனை அறிய முடியும். இந்த செயலியைச் சற்றுக் கவனத்துடன் கையாள வேண்டும். எனவே, கம்ப்யூட்டருக்குப் புதியதாக அறிமுகமானவர்கள், இதனைக் கையாளமல் இருப்பதே நல்லது.
System:
அடுத்து நமக்குக் கிடைப்பது System. இதனைப் பயன்படுத்தி, நம் கம்ப்யூட்டர் குறித்த சில அடிப்படை தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். விண்டோஸ் 10ல் எந்த வகை இயக்க முறைமை, ராம் மெமரி அளவு என்ன, எந்த சி.பி.யு.வினை நாம் பயன்படுத்துகிறோம் என்ற அடிப்படைத் தகவல்களை இந்தப் பிரிவில் பெறலாம்.
Device Manager:
நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு செயலி. கம்ப்யூட்டரில் பதியப்பட்டு இயங்கும் செயலிகள் அனைத்து குறித்தும் இந்தப் பிரிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த செயலிகளின் ட்ரைவர் கோப்புகளை நீக்கவும், அப்டேட் செய்திடவும் இதில் வழிகள் தரப்பட்டுள்ளன.
Network Connections:
கம்ப்யூட்டரில் இயங்கும் அனைத்து நெட்வொர்க் இணைப்புகளையும் இந்தப் பிரிவில் பார்க்கலாம். இவற்றின் இயக்கப் பண்புகளை எளிதாக இங்கு மாற்ற முடியும். செயல்படாமல் முடக்கி வைக்கவும் முடியும்.
Disk Management:
இதுவும் புதியதாக விண்டோஸ் இயக்கத்தில் தரப்படும் டூல். இதன் மூலம் புதிய பிரிவுகளை ஹார்ட் ட்ரைவில் உருவாக்க முடியும். ஏற்கனவே இயங்கி வரும் பிரிவுகளின் அளவுகளை மாற்றவும் முடியும். எனவே, இதனைப் பயன்படுத்துகையில், அதீத கவனத்துடன் செயல்பட வேண்டும்.
Computer Management:
விண்டோஸ் 10 இயக்க முறைமையில் உள்ள, மறைத்து வைக்கப்பட்டுள்ள வசதிகளைப் பெற உதவும் பிரிவு இது. இதனைக் கொண்டு, புதிதாக வந்துள்ள வசதிகளைப் பயன்படுத்த முடியும் என்பதால், மிகவும் கவனமாக இதனைக் கையாள வேண்டும்.
Command Prompt:
முந்தைய டாஸ் இயக்கத்தில் கட்டளைகளை இட்டுப் பெறும் பிரிவு இது. துடித்துக் கொண்டிருக்கும் (இன்றைய கர்சருக்குப் பதிலாக) கட்டளைப் புள்ளியில் நேரடியாக, இயக்க முறைமைக்கான கட்டளையினை இட்டு இயக்க முடியும். இதனுடன் Command Prompt (Admin) என்ற டூலும் தரப்படுகிறது. இவை ஒன்றே தான் என்றாலும், சில கூடுதல் உரிமைகளை இது தருகிறது. பைல்களை உருவாக்க, போல்டர்களை அழிக்க, நெட்வொர்க் செயல்பாட்டு கூறுகளை சோதனையிட, புதிய பயனாளர்களுக்கான உரிமையினை உருவாக்கி வழங்க, ஹார்ட் ட்ரைவினை பார்மட் செய்திட என்னும் பல அடிப்படை செயல்பாடுகளை இந்த கட்டளைப் புள்ளியில் இருந்து இயக்கலாம். எனவே தான், ஒரு சில செயல்பாடுகளை, Command Prompt (Admin) என்ற டூல் மூலம் மட்டுமே இயக்க முடியும்.
Task Manager:
இது குறித்து நாம் அனைவருமே அறிந்திருப்போம். கம்ப்யூட்டர் இயக்கப்படும்போது, இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து செயலிகள் குறித்து, இதன் மூலம் அறியலாம். இவை நம்முடைய கட்டளைகளுக்குச் சரியான முறையில் செயல்படவில்லை என்றால், அவற்றின் இயக்கத்தினை முடக்கி வைக்கலாம். கம்ப்யூட்டரைத் தொடங்குகையில், எந்த செயலிகள், விண்டோஸ் 10 இயக்க முறைமையுடன் தொடங்கப்பட வேண்டும், எவை தொடங்கப்படக் கூடாது எனவும் இதன் மூலம் வரையறை செய்திடலாம். முந்தைய விண்டோஸ் இயக்கங்களில், கண்ட்ரோல் பேனல் பிரிவில் மேற்கொண்ட செயல்பாடுகளை இங்கு மேற்கொள்ள முடியும்.
File Explorer and Search:
இவை புதியதாக எந்த வசதிகளையும் தரவில்லை. பைல் எக்ஸ்புளோரர் மற்றும் சர்ச் பிரிவுகளுக்கான ஷார்ட் கட் வழிகளாக இவை இயங்குகின்றன.
Run: இந்தப் பிரிவினைத் தேர்ந்தெடுக்கையில், செயலி ஒன்றைச் செயல்படுத்த கட்டளை கொடுக்கும் Run டயலாக் பாக்ஸ் கிடைக்கும். உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள ஏறத்தாழ அனைத்து செயலிகளையும் இதன் மூலம் இயக்கலாம். Command Prompt மற்றும் Registry Editor போன்றவற்றையும் கூட, அவற்றின் இயக்கச் செயலியின் பெயரை உள்ளீடு செய்து இயக்குவதன் மூலம் பெற முடியும்.
Run: இந்தப் பிரிவினைத் தேர்ந்தெடுக்கையில், செயலி ஒன்றைச் செயல்படுத்த கட்டளை கொடுக்கும் Run டயலாக் பாக்ஸ் கிடைக்கும். உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள ஏறத்தாழ அனைத்து செயலிகளையும் இதன் மூலம் இயக்கலாம். Command Prompt மற்றும் Registry Editor போன்றவற்றையும் கூட, அவற்றின் இயக்கச் செயலியின் பெயரை உள்ளீடு செய்து இயக்குவதன் மூலம் பெற முடியும்.
Shutdown or sign out:
இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் உடனடியாக இயக்க நிறுத்தலை மேற்கொள்ளலாம். அல்லது, நிறுத்தி உடன் இயக்கும் ரீஸ்டார்ட் இயக்கத்தினையும் மேற்கொள்ளலாம். இந்தப் பட்டியலில் நமக்கு இறுதியாகக் கிடைப்பது டெஸ்க்டாப். இதன் மூலம் நாம் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து செயலிகளின் விண்டோக்களைக் குறுக்கி வைத்து டெஸ்க்டாப் காட்சியைப் பெறலாம்.
மேலே சொல்லப்பட்ட அனைத்தையும், ஒரு ஷார்ட் கட் கீ தொடர் மூலமும் இயக்கலாம். விண்டோஸ் கீயுடன் எக்ஸ் கீயை (Windows Key + X) அழுத்துகையில் இந்த பவர் யூசர் மெனு பட்டியல் கிடைக்கிறது. இதன் பெயர்களை உற்றுக் கவனித்தால், ஒரு குறிப்பிட்ட எழுத்தின் கீழ் அடிக்கோடு இடப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். எடுத்துக் காட்டாக, Windows Key + X அழுத்தியவுடன் 'T' அழுத்தினால், டாஸ்க் மானேஜர் திறக்கப்படும். இது போல அனைத்துப் பிரிவுகளுக்கும் ஷார்ட் கட் கீ அமைப்புகள் உள்ளன. பவர் யூசர் மெனு பெற்று, நமக்குத் தேவையான பிரிவைத் தேடி இயக்காமல், இந்த ஷார்ட் கட் கீ தொகுப்பு தெரிந்தால், நேரடியாக அவற்றை அழுத்தி, செயலிகளை இயக்கலாம்.
பவர் யூசர் மெனு, விண்டோஸ் 10 இயக்கத்தில் நமக்குக் கிடைத்திருக்கும் ஓர் அரிய செயல் பிரிவாகும். நமக்குத் தேவையான பல டூல்களை, இதன் மூலம் விரைவாக நாம் பெற முடியும். சில டூல்களைப் பயன்படுத்துவதில், இயக்கத்திற்கே ஊறு விளைவிக்கும் வகையில் பிரச்னைகள் ஏற்படும் என்பதால், அவற்றைக் கவனமாகப் பயன்படுத்துவது நல்லது.
No comments:
Post a Comment