நடிக்கலை வாழ்ந்தாங்க – பாண்டிராஜ் சொல்லும் சிம்பு, நயன்தாரா லவ் கெமிஸ்ட்ரி....
இது நம்ம ஆளு வரும் 27 வெளியாகிறது. முன்னாள் காதலர்களின் திரைக்காதலைப் பார்க்க ரசிகர்கள் தயார்.
சிம்பு, நயன்தாரா காதல் காட்சிகள் எப்படி வந்திருக்கின்றன என படத்தின் பாண்டிராஜ் கூறினார்.
“சட்டென்று பூக்கும் பூவைப்போல, மின்னலைப்போல எந்த நொடியில் காதல் தோன்றும் என்பதை சொல்ல முடியாது. அந்த காதலை மைய கருத்தாக கொண்டு நான் செதுக்கியுள்ள திரைப்படம் தான் இது நம்ம ஆளு.
ஐடி நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் தம்பதியர்களின் காதல் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி எனக்குள் வெகு நாட்களாக இருந்து வந்தது. எனது அந்த தேடலின் முயற்சி தான் இந்த 50 சதவீத காமெடி மற்றும் 50 சதவீத காதல் திரைப்படம்.
படத்தில் நாயகன், நாயகியாக நடித்த சிம்பு, நயன்தாராவிற்கு நான் காதல் காட்சிகளை சொல்லி தர வேண்டும் என்ற அவசியமே இல்லை.
அவர்கள் இருவரின் சிரிப்பு, காதல் பார்வை, செல்ல கோபம் என அனைத்தும் படத்தின் லவ் கெமிஸ்டிரிக்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது.
அவர்களின் காதல் காட்சிகள் யாவும் நடிப்பு போலவே இல்லை. பத்து வருடத்திற்கு பிறகு இவர்கள் இணைந்து நடிக்கும் இந்த படம், எது மாதிரியும் இல்லாம, புது மாதிரியும் இல்லாம, ஒரு மாதிரியா இருக்கும்” என்றார்.
பிடிக்கிற மாதிரி இருந்தா சரிதான்.
மீண்டும் இணைந்த ஆதி, நிக்கி கல்ராணி..
சென்ற வருடம், யாகாவாராயினும் நாகாக்க படத்தில் இணைந்து நடித்த ஆதி, நிக்கி கல்ராணி மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர்.
அறிமுக இயக்குனர் சரவணன் இயக்கும் படத்தின் பூஜை நேற்று போடப்பட்டது. டில்லி பாபு தயாரிக்கும் இந்தப் படத்தில் ஆதி நாயகனாக நடிக்க உள்ளார். நாயகியாக நிக்கி கல்ராணியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர்கள் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இது.
விரைவில் படத்தின் பெயர், பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகின்றனர்.
வெளிநாட்டில் தயாராகும் வீர சிவாஜி பாடல்..
விக்ரம் பிரபு, ஷாம்லி நடிக்கும் வீர சிவாஜி பாடல் ஒன்றை ரஷ்யாவில் படமாக்குகின்றனர்.
கணேஷ் விநாயக் இயக்கத்தில் வீர சிவாஜி படத்தை மெட்ராஸ் என்டர்பிரைசஸ் தயாரித்து வருகிறது. ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு, வினோதினி உள்ளிட்டவர்களும் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் இந்தப் படத்துக்காக இமான் இசையில் சிம்பு ஒரு பாடல் பாடினார். தாறுமாறு தக்காளி சோறு என ஆரம்பிக்கும் அந்தப் பாடலை ரஷ்யாவின் ஜார்ஜியா மாகாணத்தில் படமாக்குகின்றனர். அடுத்த மாதம் இப்பாடலை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளதால் அடுத்த மாதம் பாடல்கள் வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஆனந்தி இருக்கார் குமாரு..
ராஜேஷ் எம். இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடித்துவரும் படத்தின் நாயகி மாற்றப்பட்டுள்ளார். முதலில் ஒப்பந்தம் செய்த அவீகா கோரை நீக்கிவிட்டு ஆனந்தியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படங்களுக்குப் பிறகு ராஜேஷ் இயக்கும் படம், கடவுள் இருக்கான் குமாரு. இந்தப் படத்தில் நடிக்க ஜீ.வி.பிரகாஷ், அவீகா கோர், நிக்கி கல்ராணி, பிரம்மானந்தம், மொட்டை ராஜாந்திரன், தம்பி ராமையா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு, மே முதல் வாரம் முதல் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில், எதிர்பார்த்த நடிப்பு வரவில்லை என அவீகா கோரை மாற்றிவிட்டு அவருக்குப் பதில் ஆனந்தியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இது இவர்கள் இணைந்து நடிக்கும் மூன்றாவது படமாகும்.
சொந்தத் தயாரிப்பில் கலெக்டராகும் நயன்தாரா..
நயன்தாரா நடிக்கிறார் என்றால் படம் தயாரிக்க பலபேர் இருக்கிறார்கள். அதையும் மீறி, கதை பிடித்ததால் தானே அக்கதையை படமாக்க முடிவு செய்துள்ளார் நயன்தாரா.
படத்தயாரிப்பு சூதாட்டமாகிவிட்டது தெரிந்தும் நயன்தாரா எடுத்திருக்கும் துணிச்சல் முடிவுக்கு ஒரு சலாம்.
சமீபமாக நாயகி மையப் படங்களில் ஆர்வம் காட்டுகிறார் நயன்தாரா. ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குனர் ஜெகன் நயன்தாராவிடம் சொன்ன கதை துணிச்சல்மிக்க ஒரு பெண் கலெக்டரை பற்றியது.
கதையை கேட்டவர் உடனே நடிக்க ஒப்புக் கொண்டதுடன், படத்தை தயாரிக்கவும் முன் வந்துள்ளார். நயன்தாரா பத்து வருடங்களுக்கு மேல் திரைத்துறையில் இருந்தாலும் நடிப்பைத்தாண்டி தயாரிப்பில் இறங்குவது இதுவே முதல்முறை.
நயன்தாரா தயாரிக்கிற அளவுக்கு அப்படியென்ன கதை என்று ஜெகனின் படத்துக்கு இப்போதே ஏக எதிர்பார்ப்பு.
இதே சூட்டோடு படத்தை எடுத்து வெளியிடுங்கள். வெற்றி நிச்சயம்.
No comments:
Post a Comment