Friday, 27 May 2016

IDHU NAMMA AALU REVIEW TAMIL


இதுவரை பாண்டிராஜ் இயக்கிய இயக்கிய படங்களில் காதல் இருந்திருக்கிறது. காதலுக்காகவே ஒரு படம் இயக்கலாம் என்று யோசித்திருப்பார் போல. சிலம்பரசனையும் அவரது முன்னாள் காதலியும் மிகத் திறமையான நடிகையுமான நயன்தாராவையும் (படத்தில்) இணைத்து ‘இது நம்ம ஆளு’ படத்தை இயக்கியிருக்கிறார். பல்வேறு தடைகளைக் கடந்து வெளியாகியிருக்கும் இந்தக் படம் எப்படி இருக்கிறது? பாண்டிராஜ் சொல்லி இருக்கும் இந்தக் காதல்க் கதை ரசிக்க வைத்ததா?
சென்னையில் ஐடி துறையில் வேலையுடன் வசதியாக வாழ்ந்துவருகிறான் சிவா (சிலம்பரசன்). அவனது அப்பா (ஜெயபிரகாஷ்) அவனது திருமணத்துக்குப் பார்த்துவைக்கும் பெண் மயிலா (நயன்தாரா). பெண் பார்க்கும் படலத்தில் சிவாவின் முன்னாள் காதல் உட்பட கடந்த கால வாழ்க்கை பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொள்கிறாள் மயிலா. சில ஊடல்கள், சண்டைகளைத் தொடர்ந்து இருவரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கின்றனர். அதன் பிறகு அவர்களது பெற்றோருக்கிடையில் ஒரு மனக்கசப்பு ஏற்பட்டு அதனால் திருமணம் தடைபடுகிறது. அந்தத் தடை நீங்கி சிவாவும் மயிலாவும் இணைந்தார்களா என்பதே மீதிக் கதை.
நகர்ப்புற நவீன வாழ்க்கையையும் ஆண்-பெண் உறவுகளையும் ஒட்டி காதல் ரசம் திகட்டத் திகட்ட ஒரு படத்தைத் தந்திருக்கிறார் பாண்டிராஜ். யதார்த்தமான கதைச் சூழலும், காட்சிகளும் படத்தை மனதுக்கு நெருக்கமாகின்றன. குறிப்பாக நகர்ப்புற காதலர்களும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இருப்பவர்களும் சிவாவிடமும் மயிலாவிடமும் தங்களை அடையாளம் கண்டுகொள்வார்கள்.
மையக் கதை தொடங்கும் முன் ஐடி இளைஞர்களின் வாழ்க்கை பற்றி தரப்படும் சற்றே விரிவான அறிமுகம் தெரிந்த விஷயங்களைப் பேசினாலும் பாண்டிராஜின் பாணியில் சொல்லப்படுவதால் ரசிக்க வைக்கிறது.
முதல் பாதியில் நாயகனின் முன்னாள் காதலும் இரண்டாம் பாதியில் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணுடனான காதலும் விரிவாக சொல்லப்படுகின்றன. இரண்டு காதல்களுமே உண்மையாகவும் அழகாகவும் இருக்கின்றன. நாயகனின் முதல் காதல் பிரிவதும் அதை இருவரும் கடந்து செல்லும் விதமும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.
இரண்டாம் பாதியில் இன்றைய காதலர்களின் மொபைல் ஃபோனிலேயே பல மணி நேரம் பேசிக்கொண்டு (கற்பனையாக) குடும்பம் நடத்துவிடுவது மிக விரிவாகவும் யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அது குறித்த விமர்சனமும் படத்திலேயே வந்துவிடுகிறது.
இன்றைய இளைஞர்களைக் கவரும் நோக்கில் ஆங்காங்கே பெண்களை பிரச்சனைக்குரியவர்களாக சித்தரிக்கும் வசனங்கள் இருந்தாலும் நாயகியை நாயகனின் முன்னாள் காதலியையும் கண்ணியமான உண்மையான அன்பு செலுத்தும் பெண்களாக காட்டி தனது முதிற்சியான பார்வையைப் பதிவுசெய்கிறார் இயக்குனர். 
நகர்ப்புறக் காதலின் சில பக்கங்களை அழகாக படம்பிடித்திருக்கும் இயக்குனர் ஆழமான அல்லது அழுத்தமான கதைக்கு அதிகம் மெனக்கெட்டதாகத் தெரியவில்லை. கதையில் வரும் சிக்கல்கள் சுவாரஸ்யத்தைத் தக்கவைக்கும் அளவுக்கு வலுவாக இல்லை. கதையில் புதிதாக ஒன்றுமில்லை, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இல்லை.
இவற்றால் படம் ஒரு கட்டத்துக்கு மேல் அலுப்பைத் தருவதைத் தவிர்க்க முடியவில்லை. இருப்பினும் ஆங்காங்கே சில புத்திசாலித்தனமான காட்சிகள் கவனத்தைத் தக்கவைக்கின்றன. நாயகன், நாயகி மற்றும் முன்னாள் காதலி சந்தித்துக்கொள்ளும் காட்சியும் அதில் வெளிப்படும் ஒரு சஸ்பன்ஸும் திரைக்கதை ஆசிரியரின் புத்திசாலித்தனக்கு சான்று.
மிகவும் யதார்த்தமாக இருப்பதுதான் படத்தின்ச் சிறப்பும் சிக்கலும். சினிமாத்தனமாக எதுவும் இல்லை, லாஜிக் மீறல்கள் இல்லை. கதாபாத்திரங்களுடன் பார்வையாளர்கள் ஒன்ற முடிகிறது. ஆனால் படத்தில் காட்டப்படும் யதார்த்தம் திரையில் பார்த்துத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு புதுமையானதாகவோ வலுவானதாகவோ இல்லை என்பது சிக்கல். உதாரணமாக காதலர்கள் மொபைல் ஃபோனிலேயே காதல் வளர்க்கும் காட்சிகளுக்கு மிக அதிக நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவை காதல் வயப்பட்டிருக்கும்/காதலுக்காக ஏங்கும் வயதினருக்குப் பிடிக்கலாம். மற்றவர்களை எந்த அளவுக்கு ஈர்க்கும் என்று தெரியவில்லை.
படத்தின் பெரும்பகுதி வசனங்களாலேயே நிரப்பப்பட்டிருப்பதால் நாடகம் பார்க்கும் உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. மொபைல் ஃபோன் திரையில் நடப்பவற்றை திரையில் காட்டும் புத்திசாலித்தனம் மட்டுமே இந்த உணர்வை மட்டுப்படுத்த உதவுகிறது. அதே நேரத்தில் வசனங்கள்தான் படத்தின் பலம் என்பதையும் சொல்லி ஆக வேண்டும்.

சிலம்பரசன் நயன்தாரா இருவருக்குமே இது சவாலான வேடம் அல்ல. ஆனால் இருவருமே தங்கள் பாத்திரத்தின் தேவகளை உணர்ந்து கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். ’விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்துக்குப் பிறகு முழுக்க முழுக்க காதல் மட்டுமே செய்யும் சிம்புவைப் பார்க்கவே இனிமையாக இருக்கிறது. 
அதிலாவது ஒரு சண்டைக் காட்சி உண்டு. இதில் அதுவும் இல்லை. நயன்தாராவைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.
சிம்புவின் முன்னாள் காதலியாக வரும் ஆண்ட்ரியா அழகாகவும் முன்னெப்போதையுவும் இளமையாகவும் இருக்கிறார். நடிப்பிலும் குறைவைக்கவில்லை.
படம் முழுக்க வரும் நாயகனின் நண்பனாக நடித்திருக்கும் சூரி படத்தில் நகைச்சுவையை அள்ளி வழங்கவில்லை என்றாலும் ஆங்காங்கே சிரிக்கவைத்து தன் பணியை சரியாகச் செய்திருக்கிறார். பாத்திரத்தை உள்வாங்கி யதார்த்த நடிப்பிலும் பல படிகள் முன்னேறியிருக்கிறார். சிம்புவை அவர் கலாய்ப்பதும் பதிலுக்கு மொக்கை வாங்குவதும் ரசனையான கலாட்டா. சந்தானம் வரும் நான்கு காட்சிகளும் நகைச்சுவைக்கு கியாரண்டி.
சிம்புவின் அப்பாவாக நடித்திருக்கும் ஜெயபிரகாஷ் மீண்டுமொருமுறை அன்பும் அக்கறையும் மிக்க அப்பாவாக,. வழக்கம்போல் குறையின்றி நடித்திருக்கிறார்.
குறளரசனின் இசையில் பாடல்கள் காதுக்கு இனிமையாக இருக்கின்றன. அழகாக காட்சிபடுத்தப்பட்டுள்ளன. ‘மாமன் வெயிட்டிங்’ சிம்பு ரசிகர்களுக்கு ஏற்ற குத்துப்பாட்டு. சிம்புவும் அதா ஷர்மாவும் நன்றாக ஆடியிருக்கிறார்கள். ஆனால் ஒரு குத்துப் பாடல் வேண்டும் என்பதற்காகவே அந்தப் பாட்டையும் அதற்கு ஒரு முன்கதையையும் சேர்த்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. பின்னணி இசை பெரிதாக ஈர்க்கவும் இல்லை குறை சொல்லும் அளவுக்கும் ஒன்றுமில்லை.
பாலசுப்ரமணியனின் ஒளிப்பதிவு ஐடி துறை வளர்ச்சியால் வேறு வடிவம் டைந்திருக்கும் சென்னை நகரைப் சரியாப் பிரதிபலிக்கிறது.
மொத்தத்தில் நகர்ப்புற இளைஞர்களின் காதலை அழகாகவும் கண்ணியமாகவும் பெருமளவில் ரசிக்கத்தக்கதாகவும் சொல்லிய அளவில் திருப்திபடுத்துகிறது ‘இது நம்ம ஆளு’.
Rating : 2.8 / 5.0 

No comments:

Post a Comment