Friday, 13 May 2016

ஜம்புலிங்கம்-3டி - விமர்சனம்


ஜம்புலிங்கம்-3டி - விமர்சனம்
37938-a.jpg

‘அம்புலி 3டி’, ‘ஆ’ ஆகிய படங்களை இயக்கிய ஹரி & ஹரிஷ் இயக்கத்தில் வந்துள்ள மற்றுமொரு 3டி படமான ‘ஜம்புலிங்கம்’ எப்படி?
கதைக்களம்
பிரபல மேஜிக் நிபுணர் யோக் ஜாப்பி. அவரது உதவியாளர் அஞ்சனா கீர்த்தி. யோக் ஜாப்பியிடம் மேஜிக் கலையை கற்றுக்கொள்ள அவரிடம் உதவியாளராக சேருகிறார் கோகுல் நாத். ஜப்பானில் தமிழ் சங்கம் சார்பில் நடைபெறுகிற கலை நிகழ்ச்சியில் மேஜிக் நிகழ்ச்சியை நடத்த ஜப்பான் செல்கின்றனர் யோக் ஜாப்பி மேஜிக் குழுவினர். ஜப்பானில் மேஜிக் நிகழ்ச்சி துவங்கும் நிலையில் யோக் ஜாப்பிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட, கோகுல் நாத் தனக்கு தெரிந்த மேஜிக் மற்றும் ‘மைம்’ நிகழ்ச்சிகளை செய்து பாராட்டு பெறுவதோடு, ஜப்பான் முழுக்க சுற்றிப் பார்க்கும் வாய்ப்பையும் பெறுகிறார். ஜப்பானின் டோக்கியோ நகரிலிருந்து தொயாமா நகருக்கு சுற்றுல்லா செல்லும் வழியில் கோகுல்நாத்தும், அஞ்சனா கீர்த்தியும் தாங்கள் வந்த பஸ்ஸையும், உடமைகளையும் தவற விடுகிறார்கள். இடம் தெரியாத, மொழி தெரியாத ஜப்பான் நாட்டில் அவர்கள் படும் அவஸ்தை, அதிலிருந்து அவர்கள எப்படி தப்பிக்கிறார்கள் என்பது தான் ‘ஜம்புலிங்கம்-3டி’!
படம் பற்றிய அலசல்
குழந்தைகளை டார்கெட் வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் குழந்தைகள் மகிழும் விதமாக நிறைய விஷயங்கள் இருக்கிறது என்றாலும், ‘ஜங்கிள் புக்’ போன்ற பிரமிக்கத்தக்க 3டி படங்களை பார்த்து ரசித்தவர்களுக்கு இப்படம் சுமாரான 3டி திரைப்பட அனுபவத்தையே தரும்! படம் பார்ப்பவர்களை சிரிக்க வைத்தால் போதும் என்ற ஒரே எண்ணத்துடன் உருவாக்கப்பட்ட திரைக்கதை என்பதால் லாஜிக், திரைக்கதை நேர்த்தி ஆகியவற்றை பற்றி எல்லாம் இயக்குனர்கள் சிந்திக்கவேயில்லை! படத்தின் 80 சதவிகித காட்சிகளையும் ஜப்பானிலேயே படமாக்கியிருக்கிறார்கள். ஆனால் ஜப்பான் சம்பந்தப்பட்ட காட்சிகளை அழகாக படம் பிடிப்பதில் ஒளிப்பதிவாளர் சதீஷ் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருந்தால் 3டி-யில் ஜப்பான் அழகை ரசித்திருக்கலாம். ஸ்ரீவித்யாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம், ஆனால் பின்னணி இசையில் கவனம் பெறுகிறார். ஆங்கில 3டி படங்களுடன் ஒப்பிடாமல், தமிழில் ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் 3டி படம் என்ற வகையில் இந்த பட முயற்சியை பாராட்டலாம்!
நடிகர்களின் பங்களிப்பு!
அப்பாவி ஜம்புலிங்கமாக வரும் கோகுல் நாத்தின் பர்ஃபாமென்ஸ் பாராட்டும் படியாக அமைந்துள்ளது. ஜப்பான் சுமோ வீரருடனான மோதல், நடனம், மைம் செய்து சிரிக்க வைப்பது என எல்லா ஏரியாக்களிலும் கோகுல் நாத் கவனம் பெறுகிறார். யோக் ஜாப்பியின் உதவியாளராக வந்து கோகுல் நாத்தின் காதலியாகும் அஞ்சனா கீர்த்தி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார், ஆனால் நடிப்பில் இன்னும் அவர் கவனம் செலுத்த வேண்டும்! ஜப்பானில் கடத்திச் சென்ற குழந்தைக்காக தவிக்கும் தாயாக வரும் சுகன்யா, மேஜிக் நிபுணராக வரும் யோக் ஜாப்பி, ஜப்பான் ‘டான்’ ஆக வரும் ஒகிடா, ‘சிட்டி ரோபா’வாக வரும் ‘லொள்ளு சபா’ ஜீவா, ‘ஈரோடு’ மகேஷ் ஆகியோருடன் நிறைய ஜப்பான் கலைஞர்களும் நடித்துள்ளனர்.
பலம்
ஜப்பான் நாட்டு லொக்கேஷன்கள்
கோகுல் நாத் சம்பந்தப்பட்ட காட்சிகள்
ஓரளவுக்கு ரசிக்க வைக்கும் 3டி தொழில்நுட்பம்
பலவீனம்
வலுவில்லாத திரைக்கதை அமைப்பு
படத்தொகுப்பு, கிராஃபிக்ஸ் போன்ற தொழில்நுட்ப விஷயங்ளில் கவனம் செலுத்தாதது
மொத்தத்தில்…
குழந்தைகளுக்கு இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் ஜப்பானை சுற்றி வந்த ஒரு உணர்வை தரும் என்பது நிச்சயம்! அதனால் குழந்தைகளுடன் தியேட்டருக்கு ஒரு விசிட் அடிக்கலாம்!

No comments:

Post a Comment