Friday 29 April 2016

ஆண்ட்ராய்ட் போனுக்கான மைக்ரோசாப்ட் வேர்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய வேர்ட் செயலியை, ஆண்ட்ராய்ட் போன்களில் பயன்படுத்தும் வகையில், கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாகத் தரவிறக்கம் செய்திடப் பதிந்து தந்துள்ளது. இதற்கு முன், வேர்ட் செயலி பயன்படுத்த விரும்பும் பயனாளர்கள், Microsoft Office Mobile என்னும் முழு செயலி தொகுப்பினையும் தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டியிருந்தது. இதில் Word, Excel மற்றும் PowerPoint என அனைத்து செயலிகளும், இணைந்து கிடைத்தன. இதுவும் ஒரு நல்ல செயலியாகவே இருந்தது.


ஆனால், சில வேளைகளில், Office 365 கட்டணம் கட்டிப் பெற்றவர் மட்டுமே பயனாளர்களில் பலர், வேர்ட் மட்டுமே போதும் என விரும்பியதால், தற்போது வேர்ட் செயலி மட்டும் தனியே தரப்படுகிறது. இது சற்று மேம்படுத்தப்பட்டதாகவும் உள்ளது. இந்த அப்ளிகேஷன் மூலம், ஏற்கனவே நம்மிடம் உள்ள வேர்ட் டாகுமெண்ட்களைத் திறந்து படிக்கலாம். புதிதாக ஒன்றை உருவாக்கலாம். இந்த செயலியை எப்படி பெற்று பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்.


உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் இணைய இணைப்பை உறுதி செய்து கொண்டு, அதில் உள்ள கூகுள் பிளே ஸ்டோர் ஐகான் மீது கிளிக் செய்திடவும். இது ஒரு ஷாப்பிங் பேக் (கடைக்கு எடுத்துச் செல்லும் பை) போல இருக்கும். இந்த பக்கம் திறக்கப்பட்டவுடன், Microsoft Word எனத் தேடல் கட்டத்தில் டைப் செய்து தேடவும். Word என்பதில் தட்டினால், வேர்ட் செயலி குறித்த விடியோ ஒன்றைக் காணலாம். இதனை உடனடியாக, இன்ஸ்டால் செய்திட முடிவெடுத்தால், உடன் install என்பதில் டேப் செய்திடவும். ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இதனை இன்ஸ்டால் செய்திட வேண்டும் எனில், உங்கள் போனில் நிறைய இடம் இருக்க வேண்டும். வேர்ட் செயலி 209 எம்.பி. இடம் வரை எடுத்துக் கொள்ளும். ஏற்கனவே ஆபீஸ் மொபைல் (Office Mobile) செயலி உங்கள் போனில் இடம் பெற்றிருந்தால், அதனை அன் இன்ஸ்டால் செய்து நீக்கிவிடவும். மேலும் சில அப்ளிகேஷன்களை, உங்கள் மைரோ எஸ்.டி. கார்டுக்கு மாற்றிவிடவும். வேர்ட் செயலியை இன்ஸ்டால் செய்கையில், உங்கள் டேட்டா கார்ட் பயன்படுத்துவதைக் காட்டிலும், வை பி இணைப்பு பயன்படுத்துவது நல்லது. தொடர்பு விட்டுப் போகாமல் இருக்கும். வேர்ட் செயலி இன்ஸ்டால் செய்திட விருப்பம் தெரிவித்தவுடன், உங்கள் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் ஒன்றைத் தெரிவித்து அனுமதி பெற வேண்டும். அல்லது, புதிய மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் ஒன்றை ஏற்படுத்திப் பயன்படுத்த வேண்டும்.


வேர்ட் இன்ஸ்டால் செய்யப்படும். வேர்ட் செயலியினைத் திறக்கையில், ஸ்டார்ட் ஸ்கிரீன் காட்டப்படும். ஏற்கனவே, ஒன் ட்ரைவ் இணைந்து வேர்ட் செயலியைப் பயன்படுத்தி இருந்தால், அண்மையில் பயன்படுத்திய பைல்கள் பட்டியல் காட்டப்படும். ஏற்கனவே பயன்படுத்திய டாகுமெண்ட் ஒன்றைத் திறக்கக் கட்டளை கொடுத்தால், அது திறக்கப்படும். போனில் சேவ் செய்து வைத்துள்ள டாகுமெண்ட் பைல் ஒன்றையும் திறக்கலாம். வேறு ஒரு இடத்தில் வைத்துள்ள டாகுமெண்ட் பைலைத் திறக்க, '+' அடையாளத்தின் மீது கிளிக் செய்து, பைல் இருக்கும் இடத்திற்கான கட்டளையைக் கொடுக்கலாம். அல்லது ஒன் ட்ரைவ், ட்ராப் பாக்ஸ் போன்றவற்றின் முகவரிகளைக் காட்டலாம். எடுத்துக் காட்டாக, உங்கள் ஒன் ட்ரைவ் அக்கவுண்ட்டின் முகவரியைத் தந்தால், அதில் உள்ள போல்டர்கள் காட்டப்படும். அவற்றில் உள்ள டாகுமெண்ட் பைல்களைத் திறக்கலாம். டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க, அதன் மீது டேப் செய்திட்டால் போதும். திறக்கப்பட்ட பின்னர், டாகுமெண்ட்டை எளிதாகப் படிக்க, அதனை ஸூம் செய்திடலாம். அல்லது மல்ட்டி டச் திறன் கொண்ட ஸ்கிரீனாக இருந்தால், இரு விரல்களால், அழுத்தி டாகுமெண்ட் காட்சியைப் பெரிதாக்கலாம்.


டாகுமெண்ட் ஒன்றை உருவாக்க, வேர்ட் செயலியின் தொடக்க பக்கத்தில் (ஹோம் பேஜில்,) '+' அடையாளத்தில் தட்டவும். இங்கு காலியாக உள்ள டாகுமெண்ட் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்; அல்லது ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட பைல் கட்டமைப்பு (Template) ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். இது ரிப்போர்ட், தன் தகவல் குறிப்புகள் (Resumes) என எதுவாகவும் இருக்கலாம். காலி டாகுமெண்ட்டினைத் தேர்ந்தெடுத்தால், உடன் டைப் செய்திட, திரையில் காட்டப்படும் 0n-screen keyboard ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு காலியான டாகுமெண்ட்டில் டேப் செய்தால் போதும்.


தொடர்ந்து பார்மட் செய்திட A என்னும் ஐகானைத் தட்டித் தேர்ந்தெடுக்கலாம். இங்கு எழுத்துரு, வண்ணம், ஹைலைட் டூல், அழுத்தமான அமைப்பு, சாய்வமைப்பு எனப் பல விருப்பங்கள் கீழாகக் காட்டப்படும். ரிப்பன் ஏரியாவில் ஸ்வைப் செய்தால், bullets, numbering, paragraph formatting மற்றும் styles ஆகியவை கிடைக்கும். முழுத் திரையில் டாகுமெண்ட்டினைப் பார்க்கவும் ஓர் ஐகான் தரப்பட்டிருப்பதைக் காணலாம். சேவ் ஐகான் பக்கத்தில் Share ஐகான் ஒன்று தரப்பட்டிருக்கும். அதனை அழுத்தி, டாகுமெண்ட்டினை மின் அஞ்சல் வழியாக அனுப்பலாம். இன்னும் பல விருப்பத் தேர்வுகளுக்கு, இடது மேல் புறமாக உள்ள மெனு பாரினைத் தட்டிப் பெறலாம். மேலாக உள்ள கியர் அடையாளத்தில் தட்டினால், மேலும் பல விருப்ப அமைப்புகளைப் பெறலாம்.

No comments:

Post a Comment