Friday, 29 April 2016

மனிதன் திரை விமர்சனம்..Manithan movie review: Steers away from double meaning dialogues in name of comedy


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, சூப்பர் - டூப்பர் ஹிட் அடித்த மனிதன் பட டைட்டிலில் உதயநிதி ஸ்டாலின், கதாநாயகராக நடித்து தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் பேனரில் தயாரித்தும் இருக்கும் திரைப்படம். ஜாலி எல்எல்பி எனும் இந்திப் படத்தின் அச்சு அசல் தமிழ் ரீ-மேக் இது!

உதயநிதி ஸ்டாலினுடன் ஹன்சிகா மோத்வானி, ''காக்கா முட்டை" ஐஸ்வர்யா ராஜேஷ், ராதாரவி, பிரகாஷ்ராஜ், மயில்சாமி உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமும் நடித்து வெளிவந்திருக்கும் இப்படத்தை ஜீவா நடித்த "என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய ஐ.அஹமத் இயக்கி இருக்கிறார்.

கதைப்படி, கோவை - பொள்ளாச்சி பகுதி நீதிமன்றங்களில் சரியாக வாதிடும் திறமையற்ற இளம் வக்கீலாக வாழ்க்கை நடத்த முடியாது, காமெடி பீஸ் ஆகத்திகழ்கிறார் சக்திவேல் எனும் உதயநிதி ஸ்டாலின். அதனால் தன் முறைப் பெண் ப்ரியா - ஹன்சிகா மோத்வானியின் காதலையும் மனமுவந்து ஏற்க முடியாமல் தவிக்கிறார். சரியான வாதத்திறமையில்லாததால் காதலி முன், எண்ணற்ற ஏளனத்தை எதிர்கொள்ளும் சக்தி - உதயநிதி, ஒரு கட்டத்தில், கோவை பொள்ளாச்சி கீழ்கோர்ட்டே வேண்டாம்... சென்னை ஐகோர்ட்டில் ஒரு பெரும் லாயராகி விட்டு வருகிறேன் பேர்வழி... என சூளுரைத்து விட்டு பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு பஸ் ஏறுகிறார்.

சென்னை வந்து இறங்கி சில மாதங்கள், சக வக்கீல்கள் விவேக் - செல் முருகன் அண்ட் கோவினருடன் தங்கி, வயிற்றுபசியாற்றி, வாடகை தந்து வாழ்க்கை நடத்தவே கஷ்டப்படும் உதயநிதி, நீதித்துறையில் தான் விரும்பிய லட்சியத்தை அடைந்தாரா.? ஊரில் இவருக்காக காத்திருக்கும் காதலி கரம் பற்றினாரா? என்பது தான் மனிதன் படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்.

கேஸுக்கு அலையும் வக்கீலாகவும், பின், மாஸூக்கு சமூக அக்கறையுடன் ஒரு பொது நல வழக்குப்போட்டு இந்தியாவே கொண்டாடும் லாயர் ஆதிசேஷனன எதிர்த்து அலட்டலில்லாமல் ஜெயிக்கும் நியாயவான் சக்தியாக, இளம் வக்கீலாக உதயநிதி ஸ்டாலின் கச்சிதம்! இது நாள் வரை உதயநிதி நடித்தப் படங்களிலேயே

இந்தப் படத்தில் தான் அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் மனிதர் எனும் அளவிற்கு உதய் இயல்பாக, நன்றாக நடித்திருக்கும் படம் தான் மனிதன் என்றால் மிகையல்ல.

ப்ரியா - ஹன்சிகாவுக்கும் உதயநிதிக்குமான காதலும், மீடியா பர்ஸன் ஐஸ்வர்யா ராஜேஷுக்குமான புரிதலும், இருவருடனான நாயகரின் இணக்கமும், சுணக்கமும் கூட ரசனை!

ப்ரியாவாக ஹன்சிகா மோத்வானி வழக்கம் போலவே வழுவழு பொம்மை டைப்பில் சிரித்து சிரித்து ரசிகனை சிறையிலிடுகிறார். கூடவே உதயநிதியையும்...

செய்தி சேனல் நிருபர் ஜெனிபராக ஜஸ்வர்யா ராஜேஷ் அழகு, அறிவு நிருபராக உதயநிதிக்கு உதவியிருக்கிறார்.

உதயநிதியை விட இந்தியாவின் பிரபல வக்கீலாக ஆதிசேஷனாக வரும் பிரகாஷ் ராஜுக்கு நிறைய பன்ச் டயலாக்குகள். அதிலும் "என் தகுதிக்கு என்ன சம்பளம்னு நான் தான் டிசைட் பண்ணுவேன்...., உங்களுக்கு தெரியாத விஷயத்தில் உங்க அறிவை பயன்படுத்தாதீங்க... " உள்ளிட்ட பளிச் - பன்ச்களில் பிரகாஷ்ராஜின் பிரமாதமான நடிப்பையும் தாண்டி வசனகர்த்தா அஜயன் பாலா ரசிகனை அம்சமாய் வசீகரிக்கிறார். வாவ்!

கோணல் மாணலாக பேசினாலும், நேர்மை தவறாத நீதிபதி தனபாலாக வரும் ராதாரவி, மகளை இழந்த சோக சொருபீ மூர்த்தியாக சங்கிலி முருகன், விவேக், மயில் சாமி உள்ளிட்டவர்களும் நச் - டச்.

அஜயன் பாலாவின் அர்த்த புஷ்டி வசனங்கள், மதியின் யதார்த்த ஒளிப்பதிவு, சந்தோஷ் நாராயணின் பிரமாதமான இசை, ஜே.வி.மணி பாலாஜியின் பக்கா படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் படத்திற்கு பெரும் பலம்.

பட ஆரம்பத்தில் உதயநிதி கேஸ் கிடைக்காமல் அலையும் போது, கோர்ட்டில் ஒரு கை விலங்கு கைதி முக்கி முனகி கேஸ் ரிலீஸ் செய்வது.... உள்ளிட்ட தேவையற்ற, அர்த்தமற்ற நாராசமான ஒரு சில காட்சிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், காசால நிறைய விஷயத்தை வாங்க முடியும் ஆனா மரியாதையையும், சந்தோஷத்தையும் வாங்க முடியாது..." உள்ளிட்ட கதையோடு ஒட்டிய தத்துவார்த்த வசனங்களுக்காகவும், ஒருபக்கம் கேஸ் கிடைக்காமல் அல்லாடும் இளம் வக்கீல்களின் அவல நிலையையும், மற்றொரு பக்கம், வெளியே அடித்துக் கொண்டாலும் உள்ளுக்குள் கூட்டணி வைத்துக் கொண்டு, கூட்டு களவாணித்தனம் செய்யும் போலீஸையும், வக்கீலையும் துணிச்சலாக தோலுரித்து காட்டியிருப்பதற்காகவும் ஐ.அகமதுவின் எழுத்து, இயக்கத்தில் மனிதன், மாமனிதனாக ஜொலிக்கிறான்!

மொத்தத்தில், மனிதன் - புனிதன்!

No comments:

Post a Comment