அமெரிக்க,பிரிட்டன் தலைவர்களையே அசத்திய கார்ட்டூன் தொடர்...
ஸ்பாஞ்ச் பாப் ஸ்கொயார் பேன்ட்ஸ்
அமெரிக்காவில் சனிக்கிழமை காலைகளில் ஒளிபரப்பாகும் டி.வி கார்ட்டூன் தொடர்கள் மிகவும் பிரபலம். அந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் போகேமான் தொடர்தான் மிக அதிகமான வரவேற்பை பெற்றது. ஆனால் தொடங்கப்பட்ட முதல் வாரத்திலேயே, போகேமானை பின்னுக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்தது அந்த தொடர். அதுதான் ஸ்பாஞ்ச் பாப் ஸ்கொயார் பேன்ட்ஸ் கார்ட்டூன் தொடர்.
ஒவ்வொரு மாதமும் 5 கோடி பேர் இதைப் பார்க்கிறார்கள். அதேபோல பெரியவர்களையும் கவர்ந்திருக்கிறது இந்த தொடர். இதுவரை இந்தத் தொடர் வெல்லாத விருதுகளே இல்லை. பல நல்ல கருத்துகளைச் சொல்லும் தொடரும் கூட. நல்ல கருத்துகளைத் தெரிவிப்பதால் இந்தக் கார்ட்டூன் தொடரைத் தன குடும்பத்துடன் தொடர்ந்து பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், பிரிட்டன் முன்னாள் பிரதமர் கார்டன் பிரவுனும் பாராட்டுய தொடர் இது.
உருவான கதை
பிரான்ஸ் கடல் ஆய்வு நிபுணர் ஜாக்கஸ் கோஸ்டேவின் பல படங்களால் உந்தப்பட்டவர் ஸ்டீபன் ஹில்லன்பர்க். கடல் உயிரியலைப் பாடமாகப் படித்து அதைக் கற்பித்தும் வந்தார் அவர். பின்னர் ஓவியத்திலும் கார்ட்டூனிலும் ஆர்வம்கொண்டு ஓவியக் கல்லூரியில் பயிற்ச்சி பெற்றுக் கார்ட்டூனிஸ்டாக மாறினார். கார்ட்டூன் தொடர் தயாரிப்பாளர் ஜோ முர்ரேவின் கார்ட்டூன் தொடருக்குப் படைப்பு இயக்குனராக ஹில்லன்பர்க் வேலைக்குச் சேர்ந்தார். கடல் உயிரியலைச் சார்ந்து ஹில்லன்பர்க் உருவாக்கிய ஸ்பாஞ்ச் பாப் கதாபாத்திரம் பெற்ற வரவேற்பு, அவரை முழுநேரப் படைப்பாளியாகவே மாற்றிவிட்டது.
கதாபாத்திரங்கள்
தன்னம்பிக்கை, கபடமற்ற மகிழ்ச்சி, செய்யும் ஒவ்வொரு செயலிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட மனித குணாதிசயங்களை கொண்ட ஒரு மஞ்சள் நிறக் கடல் பஞ்சு தான் ஸ்பாஞ்ச் பாப். ஃபாஸ்ட் புட் உணவகத்தில் சமையல்கலை வல்லுனராகப் பணிபுரியும் பாப், மனம் தளராத, சுறுசுறுப்பான குணத்தைக் கொண்டவர்.
கதை அமைப்பு
பசுபிக் கடலின் அடியில் இருக்கும் பிகினி பாட்டம் என்ற கற்பனை நகரம் தான் இந்தக் கதை நடக்கும் இடம். இங்கே இருக்கும் அனைத்துக் கடல்வாழ் உயிரினங்களுமே மனிதர்களைப் போலக் குணாதிசயங்களைக் கொண்டவை. இவை கார், படகு என இரண்டையும் கலந்து செய்த ஒரு புது மாதிரியான வாகனத்தில் பயணிக்கும். உணவகங்கள், திரையரங்கம், வங்கி என்று அனைத்தையுமே இங்கே கடல்வாழ் உயிரினங்கள் நடத்தி வருகின்றன.
பாப்பின் கதை
சமயலறையில் பயன்படுத்தப்படும் ஸ்பாஞ்ச் பஞ்சை பார்த்திருக்கிறீர்களா? சதுர வடிவில் மெத்து மெத்தென்று இருக்கும் அந்தப் பஞ்சு, உயிர் பெற்று, வெள்ளை சட்டை, சிவப்பு டை, காக்கி கால்சட்டை அணிந்துவந்தால் எப்படி இருக்கும்? அவர்தான் ஒரு அன்னாசிப்பழ வீட்டில் குடியிருக்கும் நமது நாயகன் பாப்.
உணவகத்தில் சமையல்கலை நிபுணராகப் பணிபுரியும் பாப், கராத்தே கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவருக்கு முறையாகப் படகு ஓட்டத் தெரியாது. ஆகவே, இவர் படகு ஓட்டக் கற்றுக் கொடுக்கும் பயிற்சிப் பள்ளியில் படகு ஓட்டக் கற்றுக்கொள்கிறார். இவருடைய படகு ஓட்டத் தெரியாத குணமே பல நகைச்சுவை காட்சிகளுக்கு வழிவகுக்கிறது.
இதுதவிர மீன் பிடிப்பது, கடலில் வரும் நீர்க்குமிழிகளை உடைப்பது ஆகியவை பாப்பின் பொழுதுபோக்குகள். உண்மையில் பாப் ஒரு பயந்த சுபாவம் கொண்ட நாயகன். ஆனால் இவருடைய விட்டுக்கொடுக்காத குணமே இவரை உலக அளவில் ரசிக்க வைக்கும் கார்ட்டூன் கதாபாத்திரமாக மாற்றி இருக்கிறது.
No comments:
Post a Comment