Saturday 23 April 2016

வெற்றிவேல் – திரை விமர்சனம்


வெற்றிவேல் – திரை விமர்சனம்;-
post-1-0-95777500-1461349373.jpg

ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற இளவரசுவின் மூத்த மகன் சசிகுமார். இவர் சொந்தமாக பூச்சி மருந்துக் கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியில் வேளாண் அதிகாரியாக பணியாற்றும் மியா ஜார்ஜை விரட்டி விரட்டி காதலிக்கிறார்.
ஒருகட்டத்தில் மியாவும் சசிகுமாரின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டுகிறார். ஒருநாள் தனது சொந்த ஊருக்கு செல்கிறார் மியா ஜார்ஜ். அவர் திரும்பி வருவதற்குள் சசிக்குமாரின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது.
வெளியூரில் படிப்பு முடித்துவிட்டு சொந்த ஊருக்கு வரும் சசிகுமாரின் தம்பி ஆனந்த் நாக், அந்த ஊர் தலைவரான பிரபுவின் மகளை காதலிக்கிறார். அவளும் இவரை காதலிக்கிறாள்.
இவர்களது காதல் சசிகுமாரின் வீட்டுக்கு தெரியவரவே, பிரபுவின் வீட்டுக்கு சென்று பெண் கேட்கிறார் இளவரசு. ஆனால், சாதி, அந்தஸ்தை காரணம் காட்டி பிரபு இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
இந்த விஷயம் சசிகுமாருக்கு தெரியவரவே, தம்பியின் காதலுக்கு உதவி செய்ய நினைக்கிறார். ஊர் திருவிழாவின் போது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை கடத்துகிறார்.
ஆனால், கடைசியில் பார்க்கும்போது இவர்கள் பிரபுவின் மகளுக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணான நிகிலாவை கடத்தி வந்துவிடுகின்றனர். அவள், பிரபுவின் தங்கையான விஜி சந்திரசேகரின் மகனுக்கு நிச்சயிக்கப்பட்டவர்.
தவறு நடந்துவிட்டதை நிகிலாவுக்கு விவரிக்கிறார் சசிகுமார். அவளும் அதை ஏற்றுக்கொண்டு ஊர்க்காரர்களுக்கு அதைச் சொல்லி புரிய வைப்பதாக அழைத்து செல்கிறார்.

ஆனால், நிகிலா யாரோ ஒருவனுடன் ஓடிவிட்டதாக கூறி, விஜி சந்திரசேகர் நிகிலாவின் அப்பாவை அவமானப்படுத்துகிறார். அவமானத்தால் அவர் தற்கொலை செய்துகொள்கிறார்.
இதனால் நிகிலாவின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடுகிறது. போலீஸ் விசாரணையில் நிகிலா, சசிகுமாருடன் விருப்பத்தின் பேரிலேயே சென்றதாக கூறி அவரை மாட்டிவிடுகிறார். இதனால், என்னசெய்வதென்று முழிக்கும் சசிகுமாரிடமே, நிகிலாவை அனுப்பி வைக்கின்றனர் போலீசார்.
இறுதியில், சசிகுமார் நிகிலாவுக்கு வாழ்க்கை கொடுத்தாரா? மியா ஜார்ஜ் உடன் சேர்ந்தாரா? தம்பியின் காதலை சேர்த்து வைத்தாரா? என்பதே மீதிக்கதை.
நாயகன் சசிகுமார் ஒவ்வொரு படத்திற்கும் தன்னைத்தானே அழகாக மெருகேற்றிக் கொண்டே வருகிறார். கிராமத்து பாணியில் அமையும் படங்கள் என்றால் சசிகுமாருக்கு நடிப்பு சொல்லித்தர தேவையில்லை.
அந்த வகையில் இந்த படத்திலும் தனது பாணியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார். ஆனால், குளோசப் காட்சிகளில் காட்டும்போது சரியான முகபாவனைகளை காட்ட ரொம்பவும் சிரமம் எடுத்துக் கொள்கிறார். அதேபோல், டான்ஸ் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் கமர்ஷியல் ஹீரோவாக வலம் வருவார்.
நாயகியான மியா ஜார்ஜ் பார்க்க அழகாக இருக்கிறார். இவருக்கான காட்சிகள் குறைவுதான் என்றாலும், தனது கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். புதுமுக நடிகைகளான நிகிலா, வர்ஷா ஆகியோரும் புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

பிரபு தனது மகளுக்கு வேண்டியதை செய்துகொடுக்கும் பொறுப்புள்ள தந்தையாகவும், ஊரில் பிரச்சினை ஏதும் ஏற்பட்டால் முதல் ஆளாக தட்டிக்கேட்கும் தலைவராகவும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
தம்பி ராமையா வரும் காட்சிகள் வழக்கம்போல் கலகலப்பு. விஜி சந்திரசேகர் வில்லியாக அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். கிராமத்து பாணியில் ஒரு நல்ல குடும்பப் பாங்கான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் வசந்தமணி. வழக்கமான சசிகுமார் படங்களிலிருந்து இப்படத்தை மிகவும் மாறுபட்டு எடுத்திருக்கிறார்.
அந்த படங்களின் தாக்கம் தன்னுடைய படத்தில் இருந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார். ஆனால், முதலில் படம் மெதுவாக நகர்ந்தாலும், 30 நிமிடங்களுக்கு பிறகு விறுவிறுப்படைகிறது. அழகான திரைக்கதையுடன் அனைவரும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.
டி.இமான் இசையில் பாடல்கள் ஏனோ ரசிக்க தூண்டவில்லை. பின்னணி இசை ஓகே ரகம். எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு தஞ்சை அழகையும், வயல்வெளிகளின் பசுமையையும் அழகாக படமாக்கியிருக்கிறது.

No comments:

Post a Comment