தற்கொலை எண்ணம் வந்தால், தயவுசெய்து இந்தப்படம் பாருங்கள், மனம் மாறிவிடும்...
உலகப் புகழ்பெற்ற கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோ, ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் முதல் நம்ம ஊர் கனவுக் கன்னி சில்க் ஸ்மிதா வரைக்கும் சினிமாத்துறையைச் சேர்ந்த பிரபலங்களின் தற்கொலைகள் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கிறது.
வரும் காலத்தில் யாரும் தற்கொலை செய்து கொள்ளாத ஒரு உலகை உருவாக்க வேண்டும். தற்கொலை எவ்வளவு தவறானது என்பதைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய ஏராளமான படங்கள் வெளிவந்திருக்கின்றன. அந்த மாதிரியான ஒரு படம் தான் "இட்ஸ் எ வொன்டர்ஃபுல் லைஃப்" .
தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமுடையவன் இந்தப் படத்தைப் பார்த்தால் நிச்சயம் தன் எண்ணத்தை மாற்றி வாழ்க்கையை நேசிக்கத் துவங்கிவிடுவான்.
படத்தின் கதையைப் பார்ப்போம்.
நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஜார்ஜ் எல்லோருக்கும் உதவக் கூடியவன்.கனிந்த இதயமுடையவன்.
யாருக்கும் தீங்கு நினைக்காதவன். அவனது அப்பா மாரடைப்பால் இறந்த பிறகு, அவரது நிறுவனத்தை நிர்வகிக்கத் தொடங்குகிறான்.ஜார்ஜூக்குப் போட்டியாக உள்ள பார்ட்டர் எப்படியாவது ஜார்ஜை வீழ்த்தி மக்களிடையே கெட்ட பெயர் வாங்க வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறான்.
ஜார்ஜை பழிவாங்க பல சூழ்ச்சிகளைச் செய்கிறான். அப்படி ஒரு சூழ்ச்சியில் மாட்டிக்கொள்ளும் ஜார்ஜ் மக்களின் பணத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகிறான்.
பார்ட்டரிடமே கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால் அவன் பணம் தராமல் ஜார்ஜை அவமானப்படுத்தி வெளியேற்றிவிடுகிறான். ஜார்ஜ் 20,000 டாலருக்கு இன்ஷூரன்ஸ் எடுத்திருப்பதால் , தற்கொலை செய்துகொண்டால் கிடைக்கும் அந்தப் பணத்தை மக்களுக்குக் கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்கிறான்.மனைவி, குழந்தைகளிடம் சணடை போட்டுவிட்டு , நான் இனி வீட்டுக்கு வரமாட்டேன் என்று கிளம்புகிறான்.
நன்றாகக் குடித்துவிட்டு பலரிடமும் சண்டை போடுகிறான்
கடைசியில் ஆற்றுப் பாலத்தில் மேல் ஏறி தற்கொலை செய்துகொள்ள தயாராக நிற்கிறான் அப்போது யாரோ ஒருவர் ஆற்றுக்குள் குதித்து விடுகிறார். அதைப் பார்த்த ஜார்ஜ் ஆற்றுக்குள் குதித்து அவரைக் காப்பாற்றுகிறார். ஆற்றுக்குள் குதித்தவர் ஜார்ஜிடம் " நான் உன்னைக் காப்பாற்றவே ஆற்றில் குதித்தேன். நான் ஒரு தேவதூதன் " என்கிறான், ஜார்ஜ் நம்பவில்லை. உடனே தேவதூதன் தன் சக்தியைப் பயன்படுத்தி ஜார்ஜிடம் " நீ இந்த பூமியில் பிறக்காமல் இருந்திருந்தால் உன் குடும்பம், உன் மனைவி, மக்களெல்லாம் எப்படிக் கஷ்டப்படுவார்கள் பார்" என்று காட்டுகிறார்.
ஜார்ஜுக்கு இப்போதுதான் தான் வாழ்ந்த அற்புதமான வாழ்க்கையைப் பற்றி புரிய ஆரம்பிக்கிறது .தேவதூதன் மறைகிறான். வாழ்க்கை தனக்கு கிடைத்த அற்புதமான பரிசு என்று உணர்கிறான் ஜார்ஜ்.
தற்கொலையிலிருந்து மீண்ட ஜார்ஜ் மகிழ்ச்சியுடன் வீட்டுக்குச் சென்ற போது , குடும்பத்தினர் வந்து ஆனந்தக் கண்ணீரில் தழுவிக்கொள்ள , நண்பர்கள் ஜார்ஜுக்கு தேவையான பணத்தைக் கொடுத்து உதவுகின்றனர்.
இப்படித்தான் எல்லோரும், இந்த நிமிடம் நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதை மட்டுமே யோசித்து யோசித்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எல்லோருடைய வாழ்க்கையும் ஏதோ ஒரு அர்த்தத்துடன்தான் இருக்கிறது . இங்கு இன்பமோ, துன்பமோ நிரந்தரமில்லை.
அவற்றைத் தாண்டி நம் வாழ்க்கைப் பயணத்தில் தொடர்ந்து பயணிப்பதே வாழ்க்கை என்பதை அழகாக எடுத்துச் சொல்கிறார் இந்தப் படத்தின் இயக்குனர் ஃப்ராங்க் காப்ரா.
தமிழில் நம்ம நடிகர்திலகம் சிவாஜி நடித்திருக்கிறார் , படம் "முதல் தேதி " அதுவும் அற்புதமா இருக்கும்.....
நன்றி-விகடன்
No comments:
Post a Comment