Saturday, 23 April 2016

ஸ்டார்ட் மெனு உருவாக்கம்


மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் தொகுப்பினை அறிமுகப்படுத்திய போது, பயனாளர்கள் பலரும் பாராட்டி, பயன்படுத்தி, அனுபவித்த ஒரு டூல், ஸ்டார்ட் மெனு ஆகும். மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஸ்டார்ட் மெனுவினை, விண்டோஸ் 95 சிஸ்டத்தில் அறிமுகம் செய்தது. அதன் பின்னர், இதன் தோற்றத்தில் பெரிய மாற்றம் ஏதும் தரப்படவில்லை. இருப்பினும், வாடிக்கையாளர்கள், இதனைப் பெரிதும் ரசித்துப் பயன்படுத்தினார்கள். அதனால் தான், விண்டோஸ் 8 சிஸ்டம், ஸ்டார்ட் மெனு இல்லாமல் அறிமுகமானபோது, அனைவரும் திகைத்துப் பின் வாங்கினார்கள். பெரும் அளவில் குழப்பக் கூக்குரல்கள் எழுந்தன. இந்த நீக்கத்திற்குக் காரணமான பல புரோகிராமர்கள், அலுவலர்களை மைக்ரோசாப்ட் வீட்டுக்கு அனுப்பியது.  மைக்ரோசாப்ட் தன் தவறை உணர்ந்து கொண்டது. என்னதான், புதிய கட்டமைப்பு என்றாலும், பயனாளர்களின் பாசத்திற்குரிய ஒன்றை நீக்கியிருக்கக் கூடாது என்று தன்னைத் திருத்திக் கொண்டது.


விண்டோஸ் 8.1.ல் ஓரளவிற்கு ஸ்டார்ட் மெனு தரப்பட்டது. விண்டோஸ் 10 சிஸ்டத்தில், ஸ்டார்ட் மெனு முழுமையாக மாற்றப்பட்டு, பயனாளர்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவதாக அமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. சில கூடுதல் வசதிகளும் இதில் இணைக்கப்பட்டன. அதே நேரத்தில், தான் முயற்சி செய்து வழங்கிய டைல்ஸ்கள் கொண்ட இடைமுகத்தினையும், விண்டோஸ் 10ல் தர மைக்ரோசாப்ட் தயங்கவில்லை. மக்கள் விரும்பி, மகிழ்ந்து பயன்படுத்தும் இந்த ஸ்டார்ட் மெனு குறித்து இங்கு பார்க்கலாம்.
 

எதற்காக ஸ்டார்ட் மெனு?

விண்டோஸ் சிஸ்டத்தில், புரோகிராம்களை இயக்க, ஸ்டார்ட் மெனு ஒரு தொடக்க நிலை கட்டமைப்பாக வடிவமைக்கப்பட்டது. விண்டோஸ் சிஸ்டத்தைப் பொறுத்தவரை, டெஸ்க்டாப், புரோகிராம்களை இயக்க ஒரு தளம் அல்ல; அந்தப் பணியை ஸ்டார்ட் மெனு மூலமே மேற்கொண்டு வந்தோம். ஸ்டார்ட் மெனுவினை திரையின் இடது மூலையில் தரப்படும் ஐகானில் கிளிக் செய்து அல்லது விண்டோஸ் கீயினை அழுத்திப் பெற்றோம். இந்த இரு வழி செயல்பாடுகளிலும், விண்டோஸ் புரோகிராம்கள் நமக்கு ஒரு கொத்தாகக் கிடைக்கப் பெற்றன. ஐகான் ஒன்றில் கிளிக் செய்தால், நமக்கு உடனே புரோகிராம் இயக்கம் கிடைத்து வந்தது. அந்த அளவிற்கு அது ஓர் எளிதான செயலாக இருந்தது. 
 


விண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனுவில் என்ன சிறப்பு?

விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் கிடைக்கும் ஸ்டார்ட் மெனு, வழக்கமான பாரம்பரிய ஸ்டார்ட் மெனுவின் அம்சங்களைக் கொண்டுள்ளது. விண்டோஸ் 7 வரை நாம் பழகி வந்த ஸ்டார்ட் மெனு, அதே பயன்களைச் சற்றும் குறைவில்லாத வகையில் கொண்டதாக புதிய ஸ்டார்ட் மெனு உள்ளது. அதே நேரத்தில், பெரும்பாலான மக்கள் பார்த்து சற்று அச்சப்பட, குழப்பமடைந்த, விண்டோஸ் 8ல் தரப்பட்டுள்ள டைல்ஸ் வகை ஸ்டார்ட் மெனுவும் தரப்பட்டுள்ளது. 

சுருக்கமாகச் சொல்வதென்றால், விண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனு இடது பக்கம் பழைய மெனுவினையும், வலது பக்கம் புதிய டைல்ஸ்களையும் கொண்டதாக உள்ளது. இதனால், புரோகிராம்களை அறிந்து இயக்க, நமக்கு இரு வழிகள் கிடைக்கின்றன. 
இடதுபுறத்தில், அப்ளிகேஷன்கள் / புரோகிராம்கள், நமக்கு அகர வரிசையில் கிடைக்கின்றன. வலது பக்கம் உள்ள புரோகிராமிற்கான டைல்ஸ்களை, நம் விருப்பப்படி, எந்த வரிசையிலும் அமைத்து இயக்கலாம். இதனால், நாம் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களை, குழுவாக அமைத்து எளிதாக இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். சிலர், மைக்ரோசாப்ட் ஆபீஸ் புரோகிராம்கள் அனைத்தையும் ஒரு குழுவாகவும், போட்டோக்கள் சம்பந்தப்பட்டவற்றை ஒரு குழுவாகவும் அமைத்து இயக்கி வருவது இதற்கான ஓர் எடுத்துக் காட்டாகும்.  சுருக்கமாகச் சொல்வதென்றால், விண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனு, நம் விருப்பத்திற்கு வளைந்து கொடுக்கும் தன்மையினைக் கொண்டுள்ளது. இதனை எப்படி வளைக்கலாம் என்று இங்கு பார்ப்போம்.

 


அளவை மாற்றலாம்

ஸ்டார்ட் மெனு மிகவும் அகலமாகவோ அல்லது மிகக் குறுகியதாகவோ உள்ளதாக நீங்கள் உணர்ந்தால், அதன் அளவினை மாற்றலாம். மிகவும் சிறியதாகவோ அல்லது மிக உயரமானதாக இருப்பதாக எண்ணினால், அதனையும் மாற்றலாம். கர்சரை அதன் முனைகளில் ஒன்றில் வைத்து, மவுஸின் இடது பட்டனை அழுத்திப் பிடித்தவாறே இழுக்க வேண்டும். இதன் மூலம், ஸ்டார்ட் மெனுவின் அளவினை, வடிவத்தினை நீங்கள் விரும்பும்படி அமைத்துக் கொள்ளலாம். ஸ்டார்ட் மெனுவின் அளவு மிகச் சிறியதாக உள்ளது என்று எண்ணி, அதன் அளவைப் பெரிதாக்கும்போது, சற்று முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனென்றால், ஸ்டார்ட் மெனு சார்ந்த அனைத்தின் அளவினையும் அது பெரியதாக்கிவிடும். இதற்கு Start | Settings | System | Display என்று செல்லவும். பின்னர் ஸ்லைடரை வலது புறமாக நகர்த்தவும். இதன் பின்னர், Apply என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து, Logout/Restart to see the changes என கிளிக் செய்து வெளியேறவும்.

குழுவாக மாற்றி அமைத்தல்

டைல்ஸ்களை குழுவாக மாற்றி அமைக்க, விருப்பப்படும் டைல் மீது கிளிக் செய்தவாறே, எங்கு அதனை வைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்த இடம் வரை இழுத்து விடவும். இந்த குழுவிற்குப் புதுப் பெயரிட, குழுவின் வலதுபுறமாக உள்ள, மூன்று சிறிய பட்டைக்கோடுகளின் மீது கிளிக் செய்து, பெயரினை டைப் செய்திடவும். உங்களுக்குத் தேவைப்படாத டைல் என்று நீங்கள் எண்ணும் டைல் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். பின்னர், Unpin from Start என்பதில் கிளிக் செய்திடவும். இங்கிருந்தவாறே, புரோகிராம்களை 'அன் இன்ஸ்டால்' என்றபடி நீக்கலாம். ஆனால், விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் இணைந்து தரப்பட்டுள்ள புரோகிராம்களை, இவ்வாறு அன் இன்ஸ்டால் செய்திட முடியாது. குறிப்பாக, “லைவ் டைல்ஸ்” எனச் சில அழைக்கப்படுகின்றன. அதாவது, மாறிக் கொண்டே இருக்கும் தகவல்களைத் தரும் டைல்களை இவ்வாறு அழைக்கின்றனர். இவை உங்களுக்குத் தேவை; ஆனால், மாறிக் கொண்டே இருக்கும் தகவல்களைப் பார்க்க விரும்பவில்லை என்றாலும், அதற்கான வழிகளை மேற்கொண்டு அமைக்கலாம். 

லைவ் டைல் மீது ரைட் கிளிக் செய்திடவும். பின்னர், More என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின்னர், Turn Live Tile off என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். பெரும்பாலான டைல்களின் அளவினை மாற்றி அமைக்கலாம். இதற்கு அதன் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் தேவையான ஆப்ஷனைக் கிளிக் செய்தால் போதும். இவற்றிற்கு, ஸ்டார்ட் மெனுவின் இடது புறத்தில், ஷார்ட் கட் இணைக்கலாம். இதற்கு Start | Settings | Personalization | Start என்று செல்லவும். இங்கு, CHOOSE WHICH FOLDERS APPEAR ON START என்ற பிரிவில், இயக்கநிலை (On) / இயக்கம் இல்லா நிலை (Off) என்பதில் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
 

வண்ணம் மாற்றி அமைக்கலாம்

டைல்களின் வண்ணத்தினை, நீங்கள் விரும்பும் வகையில் அமைக்கலாம். இதற்கு Start | Settings | Personalisation | Colours என்று செல்லவும். பின்னர், Show colour on Start, taskbar and action centre என்பதனை இயக்கவும். இங்கு விரும்பும் வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது, விண்டோஸ் சிஸ்டமே, உங்கள் டெஸ்க்டாப் பின்புல வண்ணத்திற்கேற்ற வகையில் ஒரு வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து அமைக்கும்.



No comments:

Post a Comment