சுற்றுச்சூழலை வலியுறுத்திய 'சுளீர்' சினிமாக்கள்..!
தமிழ் சினிமா இடைவேளைகளில், 'நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு? ' என்ற கேள்வியுடன் புகை மண்டலம் சூழ ஒரு விளம்பரம் வரும். அந்த விளம்பரம் திரையில் தோன்றும் சமயங்களில், பெரும்பாலோனோர் திரையரங்கக் கழிப்பிடங்களில், புகை மண்டலத்தின் நடுவே நின்றபடி, அதே கேள்வியை வேறுவிதமாகக் கேட்டுக்கொண்டிருப்பார்கள். ஒரு விளம்பரம் செய்ய முடியாத சமூக மாற்றத்தை முழு சினிமா செய்துவிட முடியுமா? அதற்கான சாத்தியங்கள் அரிதானது என்றாலும், சின்னச்சின்ன முயற்சிகளில் சில சினிமாக்கள் ஈடுபட்டிருக்கின்றன.
தண்ணீர் தண்ணீர்:
கோமல் சுவாமிநாதனின் கதை வசனத்தில் உருவான இந்தப் படம், அரசாங்கத்தால் முதலில் தடை செய்யப்பட்டு, பின்பு பல போராட்டங்களுக்குப் பிறகு வெளிவந்தது. தண்ணீர் இல்லாத கிராமமும், அதற்கான முயற்சிகளும், அரசின் அலட்சியமும், மக்களின் போராட்டங்களும், தீர்வில்லாத வேதனையுமாய் தமிழ் சினிமாவுக்கான காம்ப்ரமைஸ் குறைந்த ஒரு சினிமா எனலாம்.
கனா கண்டேன்:
இப்போது பெரும் கமர்ஷியல் இயக்குநராய் கவனிக்கப்படும் கே. வி. ஆனந்தின் முதல் படம். சுபாவின் கதை வசனத்தில் உருவான இந்தப் படம், கடல் நீரை குடிநீராய் மாற்ற முனையும் ஓர் இன்ஜினீயரின் கனவினைப் பேசியது. கமர்ஷியல் சமரசங்கள் செய்திருந்தாலும், படம் பெரிய அளவில் போகாததாலோ என்னவோ கே. வி. ஆனந்த், தன் கனவையும் மாற்றிக்கொண்டுவிட்டார் போலும்.
ஈ மற்றும் பேராண்மை:
இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் இரண்டு சினிமாக்களுமே சுற்றுச்சூழல் குறித்த அக்கறை பேசின. பரிசோதனை எலியாக மனிதனை மாற்றும் வல்லரசுகளின் நடுவே, ஈ படம் இயற்கை மாற்றத்தையும் பதிவு செய்தது. 'பேராண்மை'யோ, அழிக்கப்படும் காடுகளின் அலறலைப் பதிவு செய்தது.
'கத்தி'' மற்றும் 49 ஓ'
மேலும் '49 ஓ' மற்றும் 'கத்தி' ஆகியவை விவசாயிகளின் பிரச்னைகளைப் பேசியது.
'கத்துக்குட்டி'யும் மீத்தேன் திட்டத்தினால் மக்கள் நலன் பாதிப்பதை சற்றே தள்ளாட்டத்துடன் பேசியது. இப்படி ஆங்காங்கே சின்னச்சின்ன பதிவுகள் இருந்தாலும், சுற்றுச்சூழல் மாசுபடுவது குறித்து எடுக்கப்பட்ட வெளிநாட்டு சினிமாக்களில் காணப்பட்ட அளவுக்கான அழுத்தம், இங்கே பெரிய அளவில் இல்லை என்பது பெரும் குறைதான்.
No comments:
Post a Comment