ஒருவார இடைவெளியில் வெளியாகும் விஷாலின் இரு படங்கள்..
ஒருவழியாக மத கஜ ராஜா வெளியாகிறது. தயாரிப்பாளரின் கடன்கள் காரணமாக பல ஆண்டுகள் பெட்டிக்குள் இருந்த படம், வருகிற 13-ஆம் தேதி கண்டிப்பாக திரைக்கு வந்துவிடும் என்று அறுதியிட்டு உரைத்திருக்கிறார்கள்.
அது உண்மையாகட்டும்.
சுந்தர் சி. இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, சந்தானம் நடித்த இப்படம் வெளியாகாததால் சுந்தர் சி. விஷாலை வைத்து ஆம்பள என்ற படத்தை எடுத்தார். ஏன் இந்த கொலவெறி என்று கேட்கும்படி இருந்தது படத்தின் கதையும், திரைக்கதையும். மத கஜ ராஜா அப்படி இருக்காது என நம்புவோம்.
முத்தையா இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மருது படம் மே 20 வெளியாகிறது. மத கஜ ராஜா வருகிற வெள்ளிக்கழமை என்றால் மருது அதற்கடுத்த வெள்ளிக்கிழமை.
இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாவதால் விஷால் இரட்டை சந்தோஷத்தில் இருக்கிறாரா இல்லை இரட்டை தலைவலியில் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. படம் வெளியாவது சந்தோஷம் என்றால், இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகி இரண்டுமே கவனிக்கப்படாமல் போனால் அது கவலைக்குரிய விஷயம்தானே...
தள்ளிப் போனது கார்த்திக் சுப்பாராஜின் இறைவி
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இறைவி பட வெளியீடு தள்ளிப் போயுள்ளது.
த்ரில்லர் திரைப்படமான இறைவி மே 20 வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். தற்போது படவெளியீட்டை ஜுன் 3 -ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
மே 20 விஷாலின் மருது, சிம்புவின் இது நம்ம ஆளு ஆகிய படங்கள் வெளிவருவதாக அறிவித்துள்ளனர். போட்டி அதிகமிருப்பதால் இறைவு தயாரிப்பாளர்கள் பட வெளியீட்டை ஜுன் 3 -ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மாதவனை தொடர்ந்து பாக்சராக நடிக்கும் பரத்
‘கோலிசோடா’, ‘பத்து எண்றதுக்குள்ள’ ஆகிய படங்களை தொடர்ந்து விஜய் மில்டன், தேவயானியின் கணவர் ராஜகுமாரனை ஹீரோவாக வைத்து ‘கடுகு’ என்ற படத்தை தொடங்கியுள்ளார். இந்த படத்தில் பரத் வில்லனாக நடிக்கப்போவதாக கூறப்பட்டது. இப்படத்தின் நாயகியாக ராதிகா பிரசித்தா நடிக்கவுள்ளார். இவர் ‘குற்றம் கடிதல்’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர்.
இப்படத்தில் ராஜகுமாரன் புலி வேஷ கலைஞராக நடிப்பது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது இப்படத்தில் பரத் பாக்சராக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மாதவன் பாக்சராக நடித்து வெளிவந்த ‘இறுதிச்சுற்று’ படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து பரத்தும் இந்த படத்தில் பாக்சராக நடிப்பது படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ரஃப் நோட் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இன்னும் சில தினங்களுக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி ரசிகர்களை கலங்கடித்த 2.0 ரிலீஸ் செய்தி
ரஜினி நடித்திருக்கும் கபாலி படத்தின் டீசர் சாதனை படைத்து வருகிறது. படம் ஜுன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கபாலியை தொடர்ந்து ஷங்கர் இயக்கிவரும் 2.0 படமும் இந்தவருடமே திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், சமீபத்திய தகவல் ஒன்று அவர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
2.0 படத்தில் கிராபிக்ஸ் பணிகள் அதிகமிருப்பதால் படப்பிடிப்பு முடிந்தாலும், படம் திரைக்கு வர அதிக நாள்கள் பிடிக்கும். நிலைமை இப்படியிருக்க, 3 -ஆம் கட்ட படப்பிடிப்பே இன்னும் தொடங்கப்படாமலுள்ளது. அதனால், 2017 தீபாவளிக்கே படம் திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வருடமே 2.0 படத்தை எதிர்பார்த்த ரசிகர்கள் இந்த செய்தியால் வருத்தமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment