Friday, 15 April 2016

அவதார் 5 பாகங்கள் தொடரும்' ரசிகர்களை குஷிப்படுத்திய ஜேம்ஸ் கேமரூன்

அவதார் திரைப்படம் 5 பாகங்கள் வரை தொடரும் என அப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருக்கிறார். 

கடந்த 2௦௦9 ம் வெளியாகி உலக ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் அவதார். 

கதை சாதாரணம் தான் ஆனால் அபாரமான தொழில்நுட்பங்களினால் ஒரு புதிய உலகத்தையே இப்படத்தில் உருவாக்கியிருந்தனர்.

ஜேம்ஸ் கேமரூன்

1984 ம் ஆண்டு 'டெர்மினேட்டர்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஜேம்ஸ் கேமரூன், 32 ஆண்டுகால திரை வாழ்க்கையில் 9 படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார். 'டெர்மினேட்டர்', 'டைட்டானிக்', 'ஏலியன்ஸ்', 'அவதார்' இந்த 4 படங்களையும் விரும்பாதவர்களே கிடையாது. அதிலும் டைட்டானிக் உலகின் காதல் காவியங்களில் ஒன்றாக இன்றளவும் திகழ்கிறது.

அவதார்

'டைட்டானிக்' படம் வெளியாகி சரியாக 12 ஆண்டுகள் கழித்து 'அவதார்' வெளியானது. ஒரு கற்பனைக் கதையில் காதலைத் தூவி ஜேம்ஸ் கேமரூன் பரிமாறிய விதம் ரசிகர்களுக்கு பிடித்து விட, உலகம் முழுவதும் 2.8 பில்லியன் டாலர்களை இப்படம் வாரிக் குவித்தது. படம் வெளியாகி 7 வருடங்கள் தாண்டியும் இந்தப் படத்தின் வசூல் சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

3 ஆஸ்கர் விருதுகள்

2009 ம் ஆண்டு வெளியான இப்படம் 3 ஆஸ்கர் விருதுகளை தட்டிச்சென்றது. 'டைட்டானிக்' படத்தை ஒப்பிடும்போது ஆஸ்கர் விருதுகளில் 'அவதார்' பெரிதாக சாதிக்கவில்லை. ஆனால் அதற்கும் சேர்த்து வசூலில் இப்படம் பல்வேறு உலக சாதனைகளைப் படைத்தது.
 

அவதார் 2

இந்தப் படத்தின் தொடர்ச்சியாக தற்போது 'அவதார் 2'வை ஜேம்ஸ் கேமரூன் இயக்கி வருகிறார். 2017 ம் ஆண்டு இப்படம் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாததால் 2018 ம் ஆண்டிற்கு இப்படம் தள்ளிப் போயிருக்கிறது.

5 பாகங்கள் 

இந்நிலையில் 'அவதார்' திரைப்படம் 5 பாகங்கள் வரை தொடரும் என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்திருக்கிறார். அவதார் -3 2020 ம் ஆண்டிலும், அவதார் -4 2022 டிசம்பரிலும், அவதார்-5 2023 ம் ஆண்டிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment