கம்ப்யூட்டரில் பணியாற்றும் அனைவரும், அதன் உள்ளே இணைக்கப்பட்டு இயங்கும் அனைத்து பாகங்கள் குறித்தும் தெளிவாக அறிந்திருப்பதில்லை. மானிட்டர், மவுஸ், கீபோர்ட் போன்றவையே நாம் எளிதாகப் புரிந்து கொண்டு பயன்படுத்தும் சாதனங்களாக உள்ளன. ஹார்ட்வேர் குறித்து ஆர்வம் இல்லாத ஒரு சிலர் ஹார்ட் ட்ரைவ் அல்லது ப்ராசசர் குறித்தும் தெரிந்து வைத்திருப்பார்கள். அல்லது அவற்றின் செயல்திறன் மற்றும் கம்ப்யூட்டரின் செயல்பாட்டில் அவற்றின் மதிப்பு குறித்து அறிந்து வைத்திருப்பார்கள். ஆனால், அதிகம் தெரிந்து வைத்துக் கொள்ளப்படாத ஒரு ஹார்ட்வேர் சாதனம், கம்ப்யூட்டரின் ராம் (RAM) நினைவகம். கம்ப்யூட்டர் வேகமாக இயங்க, இதன் நிலையும் இயக்கமுமே அடிப்படையாக உள்ளது என்ற அளவில் பலரின் ராம் குறித்த தெரிதல் நின்றுவிடுகிறது. RAM நினைவகம் என்றால் என்ன? அது எந்த வகையில் செயல்படுகிறது? அதன் திறனை அதிகரிக்கும்போது, கம்ப்யூட்டர் எவ்வாறு விரைவாகச் செயல்படுகிறது? மற்றும் சார்ந்த பல கேள்விகளுக்கு இங்கு தகவல்களைப் பார்ப்போம்.
முதலில் RAM என்பதின் விரிவாக்கத்தினைக் காணலாம். இது Random Access Memory என்பதன் சுருக்குச் சொல். இதில் Random என்ற சொல்லின் பொருளே, இதன் தனிச் செயல் தன்மையைக் காட்டுகிறது. கம்ப்யூட்டரில் செலுத்தப்படும் டேட்டாவினைச் சேமித்து வைக்கும் மற்ற சாதனங்களிலிருந்து, ராம் நினைவகம் இந்த வகையில் வேறுபடுகிறது. Random என்ற சொல் “தொடர்பற்ற,” “ஒழுங்கற்ற” என்ற பொருளைத் தரும் சொல். இதன் அடிப்படையில், கம்ப்யூட்டர் எந்த இடத்திலும் தன் டேட்டாவினை, ராம் நினைவகத்தில் பதிந்து வைக்கும். அதே போல, அவற்றைப் பயன்படுத்த, எந்த இடத்தில் இருந்தும் டேட்டாவினை எடுத்துக் கொள்ளும். குறிப்பிட்ட இடத்தினை ஸ்கேன் செய்து, தேடி அந்த இடத்தில் தான் எழுதி வைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இதற்கில்லை. இந்த தேடல் வேலை இல்லாததால் தான், அதன் செயல்பாடு, ஹார்ட் டிஸ்க் அல்லது மற்ற சாதனங்களுடன் ஒப்பிடுகையில் விரைவாக மேற்கொள்ளப் படுகிறது.
நாம் சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை கம்ப்யூட்டரில் செயல்படுத்துகையில், ராம் நினைவகத்தின் செயல்பாடு தேவைப்படுகிறது. எடுத்துக் காட்டாக, வேர்ட் ப்ராசசர் சாப்ட்வேர் ஒன்றினை நாம் இயக்க முற்படுகையில், கம்ப்யூட்டர், வேர்ட் ப்ராசசர் இயக்கத்திற்குத் தேவையான டேட்டாவினை, ஹார்ட் டிஸ்க்கிலிருந்து ராம் நினைவகத்திற்கு மாற்றுகிறது. இது பெரும்பாலான கம்ப்யூட்டர்களில் உடனடியாக மேற்கொள்ளப்படும். ஆனால், டேட்டா அதிகமாக இருந்தால், நமக்குச் சில வேளைகளில் “Loading” என்ற செய்தியுடன் திரை காட்டப்படும். இதுபோல் காட்டப்படுகையில், கம்ப்யூட்டர் தனக்கு வேண்டிய, சாப்ட்வேர் அப்ளிகேஷன் சார்ந்த டேட்டாவினை ராம் நினைவகத்திற்குக் கொண்டு செல்கிறது. இவ்வாறு ஹார்ட் டிஸ்க்கிலிருந்து டேட்டா மாற்றப்படுவதால் தான், நாம் நம் பணிகளை, குறிப்பிட்ட சாப்ட்வேர் தொகுப்பில் விரைவாக மேற்கொள்ள முடிகிறது. இதுவே, ஹார்ட் ட்ரைவிலிருந்து பெற்று பயன்படுத்துவதாக இருந்தால், நேரம் அதிகமாகும்.
அப்படியானால், ராம் நினைவகத்தில் சாப்ட்வேர் டேட்டாவினைப் பதிந்து இயக்க இடம் இல்லை என்றால் என்னவாகும்?
அப்படியானால், ராம் நினைவகத்தில் சாப்ட்வேர் டேட்டாவினைப் பதிந்து இயக்க இடம் இல்லை என்றால் என்னவாகும்?
அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், ராம் நினைவகம் டேட்டாவினை மீண்டும் ஹார்ட் டிஸ்க்கிற்குக் கொண்டு சென்று, புதிய டேட்டாவிற்கு இடத்தினை உருவாக்கித் தரும். திருப்பி அனுப்பப்பட்ட டேட்டா தேவை என்றால், மீண்டும் ஹார்ட் ட்ரைவிலிருந்து எடுத்துக் கொள்ளும். இதனால், கம்ப்யூட்டரின் செயல் வேகம் குறைகிறது. எனவே தான், ராம் நினைவகம் எந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவிற்குக் கம்ப்யூட்டரின் செயல்வேகம் அதிகமாகிறது. ராம் நினைவகத்தில் அதிகமாக டேட்டாவினைப் பதிந்து இயக்க இடம் இருப்பதால், டேட்டாவினை மீண்டும் ஹார்ட் ட்ரைவிற்கு அனுப்பி, மீண்டும் பெறும் வேலைக்கு இடம் இல்லாமல் போகிறது. கம்ப்யூட்டரின் வேகம் அதிகரிக்கிறது.
உடனே, நமக்கு ஒரு யோசனை தோன்றும். அப்படியானால், ராம் நினைவகத்திலேயே ஹார்ட் ட்ரைவினை அமைக்கலாமே என்ற எண்ணம் தோன்றும். ஏன், யு.எஸ்.பி, மற்றும் டி.வி.டி. எனச் செல்ல வேண்டும். ராம் நினைவகத்தினையே ஒரு சிறிய நீள துண்டாகப் பயன்படுத்தி, டேட்டாவினை சேமிக்கலாமே என்ற எண்ணம் ஏற்படும். இங்கு தான், ராம் நினைவகத்தின் இன்னொரு தனித்தன்மை குறுக்கிடுகிறது. ராம் நினைவகம், மற்ற எந்த மீடியா சாதனங்களைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் செயல்பட்டாலும், அது பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின்சக்தி அதனை அடையாமல் இருக்கும் நிலை ஏற்படுகையில், அதில் எடுத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் டேட்டா எதுவும் அதில் இருக்காது. அனைத்தும் மறைந்து போகும். நாம் ஏற்றி வைத்த சாப்ட்வேர் அப்ளிகேஷனும், ராம் நினைவகத்தில் இருந்து மறைந்து போகும். ஹார்ட் ட்ரைவில் மட்டுமே இருக்கும். அதனால் தான், கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின்சக்தி தடைபட்டால், நாம் அனைத்தையும் முதலில் இருந்து தொடங்க வேண்டியுள்ளது.
இந்த ஒரு காரணத்திற்காகவே, நாம் செயல்படுகையில், நாம் உருவாக்கும் டேட்டாவினை அடிக்கடி சேவ் செய்திட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறோம். இதனலேயே, அனைத்து சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்களும், தானாகவே, நாம் செட் செய்திடும் கால அவகாசத்தில், அல்லது மாறா நிலையில் அமைக்கப்பட்டுள்ள கால அவகாசத்தில், நாம் அமைக்கும் டேட்டாவினை சேவ் செய்து கொள்கின்றன. சேவ் செய்கையில், ராம் நினைவகத்திலிருந்து டேட்டா ஹார்ட் ட்ரைவிற்கு மாற்றப்பட்டு சேவ் செய்யப்படுகிறது. அங்கு அது, நாமாக அழிக்கும் வரை, அழியாமல் பாதுகாக்கப்படுகிறது. ராம் நினைவகத்தின் இந்த முக்கியமான செயல்பாட்டினை நாம் மனதில் கொண்டால், கம்ப்யூட்டருக்கு நிலையான மின்சக்தியை அனுப்புவோம். அதற்கான யு.பி.எஸ். போன்ற சாதனங்களைப் பயன்படுத்துவோம். கம்ப்யூட்டரில் செயல்படுகையில், நாம் உருவாக்கும் டேட்டாவினை அடிக்கடி சேவ் செய்திடுவோம்.
No comments:
Post a Comment